தேடுதல்

2026.07.13 church uk

உக்ரைனில் கத்தோலிக்கத் திருஅவையின் மறுமலர்ச்சியை நினைவுகூரும் 35-ஆம் ஆண்டு விழா!

உக்ரைனில் கத்தோலிக்கத் திருஅவையின் இலத்தீன் வழிபாட்டு முறை அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டதன் 35-வது ஆண்டு விழா பெர்டிச்சிவில் உள்ள தூய கார்மேல் அன்னை தேசியத் திருத்தலத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழா திருஅவையின் ஆன்மீக மீளெழுச்சி, தொடர்ச்சி மற்றும் உயிருள்ள நம்பிக்கையின் அடையாளம் என்று அருள்பணி பாவ்லோ கோமியாக் தெரிவித்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

உக்ரைனில் கத்தோலிக்கத் திருஅவையின் இலத்தீன் வழிபாட்டு முறை அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டதன் 35-வது ஆண்டு விழாவை ஜூலை 19, ஞாயிறன்று, பெர்டிச்சிவில் உள்ள தூய கார்மேல் அன்னை தேசிய திருத்தலத்தில் அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். இந்நிகழ்விற்கான தனது சிறப்புத் தூதராக பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நியமித்துள்ளார்.

வத்திக்கான் ஊடகத்திற்கு அளித்த செய்தியில் திருஅவைசார் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் இயக்குநரான அருள்பணி. பாவ்லோ கோமியாக் அவர்கள், இந்த ஆண்டு விழாவானது திருஅவையின் ஆன்மீக மீள்திறன், தொடர்ச்சி மற்றும் வாழும் நம்பிக்கையின் அடையாளம் என்று விவரித்தார்.

மேலும் கத்தோலிக்கத் திருஅவை 10-ஆம் நூற்றாண்டிலிருந்தே உக்ரைனில் செயல்பட்டு வருகிறது என்றும், 1991-ல் இடம்பெற்ற மறுசீரமைப்பு திருஅவையின் மறுமலர்ச்சியைக் குறிக்கிறதே தவிர அதன் தொடக்கத்தை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

"பல பத்தாண்டுகளாக சோவியத் ஆட்சியின் துன்புறுத்தல்களால் கத்தோலிக்கர்கள் கடுமையான கட்டுப்பாடுகள், ஆலயங்கள் மூடப்படுதல் மற்றும் அருள்பணியாளர்களின்‌ பற்றாக்குறை ஆகியவற்றை எதிர்கொண்ட நிலையில், 1991 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல் அவர்களால் இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவையின் படிநிலை அமைப்பு மீட்கப்பட்டது" என்றும் "இத்தகைய சிரமங்கள் இருந்தபோதிலும், துணிச்சல்மிக்க அருள்பணியாளர்கள் திருஅவையின் நம்பிக்கையையும் பணியையும் பாதுகாத்தனர்" என்றும் அருள்பணி. பாவ்லோ கோமியாக் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், "இந்த மறுசீரமைப்பிற்குப் பின்னர், திருஅவை பல ஆலயங்களை மீண்டும் திறந்ததுடன், கல்வி மற்றும் மேய்ப்புப் பணிகளை விரிவுபடுத்தி, தனது சமூக மற்றும் தொண்டு சேவைகளையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

உக்ரேனிய சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், குறிப்பாக போர் தொடங்கியதிலிருந்து கோடிக் கணக்கான மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் திருஅவை முக்கியப் பங்கு வகித்துள்ளது என்றும் அருள்பணி. கோமியாக் அவர்கள் குறிப்பிட்டார்.

தேசத்தின் இருண்ட காலங்களில் கூட கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் உக்ரேனிய மக்களின் பக்கம் நின்று, நம்பிக்கை, ஆன்மீக வழிகாட்டுதல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது என்பதற்கு இந்த ஆண்டு விழா ஒரு நினைவூட்டலாக அமைகிறது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஜூலை 2026, 15:22