பாதிக்கப்பட்டோரின் குணப்படுத்துதலுக்கும் நம்பிக்கைக்கும் துணைநிற்போம்: புரூம் ஆயர் நார்டன்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஆஸ்திரேலியாவின் புரூம் மறைமாவட்ட ஆயர் திமோதி நார்டன் அவர்கள், தமக்கு முன்னதாக அப்பொறுப்பில் இருந்த மேனாள் ஆயர் கிறிஸ்டோபர் சாண்டர்ஸ், இரு இளம் பழங்குடியின ஆண்களுக்கு எதிராக இழைத்த 13 பாலியல் குற்றங்களில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், 2008 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்காக ஆயர் சாண்டர்ஸ் குற்றவாளி என நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அவருக்கு வாய்ப்புள்ளது. ஆயர் சாண்டர்ஸ் 1996 முதல் 2021ஆம் ஆண்டு வரை புரூம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றினார்.
தமது மேய்ப்புப் பணிக் கடிதத்தில், நீண்டகாலமாக நடைபெற்ற சட்ட நடவடிக்கையின்போது துணிச்சலுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்ட பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மற்றும் சாட்சியளித்த அனைவருக்கும் ஆயர் நார்டன் நன்றி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த துன்பம், அவமானம் மற்றும் துரோகம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட ஆயர் நார்டன் அவர்கள், மேலும் இந்த பாதிப்பு பரந்து விரிந்துள்ள கத்தோலிக்க சமூகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பாதுகாப்பு, மரியாதை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் புரூம் மறைமாவட்டம் தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்றும், பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து அணுகி, அவர்களுக்குக் குணப்படுத்துதல் மற்றும் நம்பிக்கையை நோக்கிய பயணத்தில் துணைநிற்கும் என்றும் ஆயர் நார்டன் அவர்கள் உறுதியளித்தார்.
பரந்த கிம்பர்லி (Kimberley) பகுதி முழுவதும் உள்ள சமூகங்களைப் சந்திப்பதற்கான திட்டங்களை அறிவித்த அவர், இது செவிமடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் மற்றும் உரையாடலுக்குமான வாய்ப்புகளை உருவாக்குகிறது. என்றும் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, அமைதியின் அரசியான அன்னை மரியாளிடம் (Our Lady Queen of Peace) மறைமாவட்டத்தை ஒப்படைத்த ஆயர் நார்டன் அவர்கள், நல்லிணக்கம், குணப்படுத்துதல் மற்றும் நம்பிக்கைக்காக இறைவேண்டல் செய்து செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.