தேடுதல்

குவாமின் டூமன் விரிகுடாவில் அழகிய சூரிய அஸ்தமனம். குவாமின் டூமன் விரிகுடாவில் அழகிய சூரிய அஸ்தமனம். 

ஆழ்கடல் சுரங்கத் தொழிலில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: பசிபிக் ஆயர்கள்

வணிக ரீதியிலான ஆழ்கடல் சுரங்கத் தொழிலில் அதிகரித்து வரும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்கள் விவேகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நலன் சார்ந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பசிபிக் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

வணிக ரீதியிலான ஆழ்கடல் சுரங்கத் தொழிலில் ஆர்வம் அதிகரித்து வருவதால் அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பசிபிக் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். பசிபிக் ஆயர் பேரவை (CEPAC), ஆகஸ்ட் 10, திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு மேய்ப்புப் பணி அறிக்கையில், ஆழ்கடல் என்பது இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு என்றும், அதன் பல்லுயிர்த் தன்மை, சூழலியல் உறவுகள் மற்றும் நீண்ட கால நிலைத்தன்மை குறித்து பல ஐயங்கள் நிலவி வருவதாகவும் எச்சரித்துள்ளது.

"கடுமையான அல்லது மீள முடியாத தீங்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருக்கும்போது, முழுமையான அறிவியல் சான்றுகள் இல்லை என்பதை ஒரு காரணமாகப் பயன்படுத்தி முறையான அக்கறையின்றி செயல்படக் கூடாது"  எனவும் ஆயர்கள் வலியுறுத்தினர்.

மேலும் "இது குறித்து முடிவெடுப்பவர்கள் விவேகம், வெளிப்படைத்தன்மை, பணிவு மற்றும் பொது நலன் குறித்த அக்கறையுடன் செயல்பட வேண்டும்"  என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

திருஅவை அறிவியல் ஆராய்ச்சியையோ அல்லது பொறுப்பான பொருளாதார வளர்ச்சியையோ எதிர்க்கவில்லை என்பதை  தெளிவுபடுத்திய ஆயர்கள், "மாறாக, தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது மனித மாண்பை மதிக்க வேண்டும், படைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் பொது நலனை மேம்படுத்த வேண்டும்" எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும்" படைப்பின் வளங்கள் தற்போதைய தலைமுறைக்கு மட்டுமின்றி எதிர்கால தலைமுறையினருக்கும் சொந்தமானது" என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

“பசிபிக் மக்கள் இயற்கையிலிருந்து எதைப் பெற்றார்கள் என்பதற்காக அல்ல; எதைப் பாதுகாத்தார்கள் என்பதற்காகவே எதிர்காலத் தலைமுறைகளால் நினைவுகூரப்பட வேண்டும்” என்ற தங்களது எதிர்நோக்கை அவர்கள் வெளிப்படுத்தினர்.

எதிர்காலத் தலைமுறையினர் பசிபிக் மக்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாத்து, இறைவனின் மாட்சியைப் பிரதிபலிக்கும் ஆரோக்கியமான பெருங்கடல்களைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், ஞானம், நீதி மற்றும் அன்புக்காக இறைவேண்டல் செய்து ஆயர்கள் தங்கள் அறிக்கையை நிறைவு செய்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

14 ஆகஸ்ட் 2026, 13:59