"புயல் சூழ்ந்த வேளையில் நாம் தனியாக இல்லை" : கர்தினால் Charles Maung Bo
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மியான்மரில் தொடர்ந்து இடம்பெற்று வரும் துயரங்களுக்கு மத்தியில், மக்கள் தைரியமாக இருக்கவும், இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைக்கவும் யாங்கூனைச் சேர்ந்த கர்தினால் Charles Maung Bo அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
பொதுக் காலத்தின் 19-வது ஞாயிற்றுக்கிழமையன்று மறையுரையாற்றிய போது, இவ்வாறு கூறிய கர்தினால் அவர்கள், இயேசு புயலை அடக்கிய நற்செய்தி நிகழ்வை மேற்கோள்காட்டி "நாம் புயல்களைத் தனியாக எதிர்கொள்ளவில்லை" என்று இறைமக்களுக்கு நினைவூட்டினார்.
மோதல்கள், வன்முறை, இடம்பெயர்வு, வறுமை, பயம், துயரம் மற்றும் இழப்பு உள்ளிட்ட பல புயல்களை மியான்மர் சந்தித்துள்ளது என்று கூறிய கர்தினால் போ அவர்கள், பல குடும்பங்கள் தங்கள் வீடுகளையும் அன்புக்குரியவர்களையும் இழந்துள்ள அதேவேளையில் இளைஞர்கள் தங்கள் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவது, ஒரு அருள்பணியாளர் தன் மக்களுடன் இருப்பது, அருள்சகோதரிகள் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குச் சேவை செய்வது, அல்லது பசியோடு இருப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்துகொள்வது போன்ற அன்பான மற்றும் தன்னலமற்ற சிறு செயல்கள் வழியாகக் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதையும் தனது மறையுரையில் அவர் வலியுறுத்தினார்.
இளைஞர்களிடம் உரையாற்றிய போது வெறுப்பு தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்திய கர்தினால் அவர்கள், இளைஞர்கள் "மனசாட்சியுள்ள ஆண்களாகவும் பெண்களாகவும்" மாறி, அமைதி, நல்லிணக்கம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குபவர்களாகத் திகழ வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பயம், கோபம் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த கர்தினால் அவர்கள், அனைவரும் தங்கள் கண்களால் இயேசுவையே உற்று நோக்க வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார்.
புயல்கள் முடிவுக்கு வரவும், மியான்மர் அமைதி, மாண்பு, நீதி மற்றும் நல்லிணக்கத்தை அனுபவிக்கவும் கர்தினால் அவர்கள் இறைவேண்டல் செய்து செய்தியை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.