மேற்குக் கரை “சட்டமில்லாத நிலமாக” மாறியுள்ளது: கர்தினால் பித்சபாலா
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மேற்குக் கரையை ஒரு "சட்டமில்லாத நிலம்" என்று வர்ணித்த எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்சபாலா அவர்கள், திறம்பட செயல்படும் பாதுகாப்பு அல்லது சட்டக் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி, இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான வன்முறை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாகவும் எச்சரித்தார்.
ரிமினி சந்திப்பின் இறுதி நாளில் உரையாற்றிய கர்தினால் பித்சபாலா அவர்கள், வன்முறையைத் தடுக்க தூதரக முயற்சிகளை வலுப்படுத்துமாறு மேற்கத்திய நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததுடன் தூதரகப் பேச்சுவார்த்தையில் சில பலவீனங்கள் இருந்தாலும், ஆயுதங்கள் மற்றும் இராணுவப் படையைப் பயன்படுத்தாமல் மோதல்களைத் தீர்ப்பதற்கு அதுவே சிறந்த வழி என்று வலியுறுத்தினார்.
காசா குறித்துப் பேசிய அவர், அங்குள்ள மனிதநேய சூழ்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் அதே வேளையில், நம்பிக்கையை உடனடியாக எட்டக்கூடிய ஓர் அரசியல் தீர்வாகக் கருதி குழப்பமடையக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
உண்மையான நம்பிக்கை என்பது மனிதர்களுக்கு இடையேயான சந்திப்புகள், இறைநம்பிக்கை மற்றும் ஒருவரை ஒருவர் மனிதத்தன்மையற்று நடத்துவதை மறுக்கும் மனிதர்கள் மூலமாகவே வளர்கிறது என்று அவர் விளக்கினார்.
இஸ்ரயேலர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் தங்களின் சொந்த நிலத்தில் ஒரு வீட்டைப் பெறுவதற்கான உரிமையை அங்கீகரிப்பதற்கான ஒரே வழி இரு-நாடு தீர்வு மட்டுமே என்று கர்தினால் பித்சபாலா மீண்டும் உறுதிப்படுத்தினார்.
போரின் மனிதத்தன்மையற்ற விளைவுகள் குறித்து எச்சரித்த அவர், இது இளைஞர்களின் உயிரையும் எதிர்காலத்தையும் திருடக்கூடும் என்றும் கூறி, துன்பப்படுபவர்களுக்கு அருகில் இருக்குமாறும், இயலாமை தலைதூக்கும் நேரங்களில் கிறிஸ்துவை நோக்கித் திரும்புமாறும் கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார்.
மதங்களுக்கு இடையிலான உரையாடலை வலுப்படுத்தவும், பல்வேறு தரப்பினரின் பார்வைகளைக் கேட்டறியவும், தவறான தகவல்களை நிராகரிக்கவும் அழைப்பு விடுத்த கர்தினால் பித்சபாலா அவர்கள், கடந்த காலத்தின் துன்பங்களும் காயங்களும் எதிர்கால தலைமுறைகளைப் பாதிக்காத வகையில், “நினைவுகளைத் தூய்மைப்படுத்தும்” பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சமூகங்கள் நம்பிக்கைக்கான ஆதாரங்களாக ஆர்வம், மகிழ்ச்சி மற்றும் நட்பை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.