தேடுதல்

“கத்தோலிக்க அருள்சகோதரிகள் தங்கள் கதைகளைத் தாங்களே சொல்ல வேண்டும்”: சகோதரி ஜேன் வகாஹியு

கத்தோலிக்க அருள்சகோதரிகள் தங்கள் திருத்தூதுப் பணி மற்றும் அனுபவங்களை தாங்களே எடுத்துரைப்பதன் முக்கியத்துவத்தை கான்ராட் என். ஹில்டன் அறக்கட்டளையின் சகோதரி ஜேன் வகாஹியு அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சகோதரிகளின் திருத்தூதுப் பணி, கல்வி மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டிற்கு ஆதரவளித்து வரும் கான்ராட் என். ஹில்டன் அறக்கட்டளையின் திட்டச் செயல்பாடுகளுக்கான இணைத் துணைத் தலைவரும், கத்தோலிக்க அருள்சகோதரிகள் பிரிவின் தலைவருமான சகோதரி ஜேன் வகாஹியு அவர்கள், இன்றைய எண்ணிம யுகத்தில் கத்தோலிக்க அருள்சகோதரிகள் தங்களின் சொந்தக் கதைகளைத் தாங்களே சொல்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

ருவாண்டாவின் கிகாலியில் இடம்பெற்ற சிக்னிஸ் (SIGNIS) உலக மாநாட்டில் பேசிய அவர், கிராமப்புற சமூகங்கள், நகரத்தின் மையப் பகுதிகள் மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் மத்தியில் தாங்கள் செய்யும் பணிகளைப் பற்றி உண்மையாக எடுத்துரைக்க அருள்சகோதரிகளே மிகவும் தகுதியானவர்கள் என்று விளக்கினார்.

பெந்தெகோஸ்தே திட்டம்

சமூகத் தொடர்பிற்கான திருப்பீடத்துறையுடன் இணைந்த கூட்டாண்மைத் திட்டமான 'பெந்தெகோஸ்தே திட்டத்தின்'  சிறப்பம்சங்களைக் குறித்துப் பேசிய சகோதரி ஜேன் வகாஹியு அவர்கள், வத்திக்கான் செய்திகளில் 10 மொழிகளில் வாரந்தோறும் வெளியிடப்படும் கதைகள் வாயிலாக, கவனிக்கப்படாத சமூகங்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவை செய்யும் அருள்சகோதரிகளின் அனுபவங்களுக்கு இத்திட்டம் அதிக கவனத்தைப் பெற்றுத் தருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு மூலம் நற்செய்தி அறிவிப்புப் பணி

அருள் சகோதரிகளின் இந்தக் கதைகளை ஒரு வகையான நற்செய்தி அறிவிப்பாக விவரித்த அவர், இந்தக் கதைகள் அருள்சகோதரிகளை ஆலயங்களில் மட்டுமின்றி, மக்களின் அன்றாடப் போராட்டங்களிலும் அவர்களுடன் துணை நிற்பவர்களாகக் காட்டுகின்றன என்றார். மேலும் அவர்களின் பணி இரக்கம், எதிர்நோக்கு, அன்பு மற்றும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அருள்சகோதரிகளை மற்றவர்கள் வெறும் கதாநாயகர்களைப் போலச் சித்தரிக்கக் கூடாது என்று  வலியுறுத்திய சகோதரி ஜேன், அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஏனெனில் அவர்கள் உள்ளூர் சமூகங்களை நன்கு புரிந்துகொள்கிறார்கள், மேலும் உள்ளூர் மக்களின் மொழிகளைப் பேசி அவர்களுடன் நெருக்கமாகப் பயணிக்கிறார்கள் என்றும் சுட்டிக்காடியுள்ளார்.

கல்வி, பயிற்சி மற்றும் எண்ணிமத் தளங்களின் கதைசொல்லல் ஆகியவற்றின் மூலம் அருள்சகோதரிகளின் தகவல் தொடர்புத் திறன்களை வலுப்படுத்துவது அவர்களின் பணிகளை விரிவுபடுத்தும் என்றும், உலகளவில் விளிம்புநிலைச் சமூகங்களுக்கு நம்பிக்கை, கலாச்சார நல்லிணக்கம் மற்றும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர உதவும் என்றும் கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

12 ஆகஸ்ட் 2026, 15:26