தேடுதல்

கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம்  (ANSA)

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மேற்கு கொலம்பியாவில் ஆகஸ்ட் 10 அன்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஏறத்தாழ 570 பேர் காயமடைந்துள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 10, திங்களன்று மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவிலான ஆற்றல் மிக்க நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஏறத்தாழ 570 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் பலர் இன்னும் காண்டறியப்படவில்லை.

சோகோவில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் அதிர்வு கொலம்பியாவின் பெரும்பகுதியிலும் மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் உணரப்பட்டது.

இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பெரீரா நகரில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மனிசலெஸில், பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் மேலும் இருபதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மனிசலெஸின் பெருங்கோவில் உள்பட பல ஆலயங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கலி மற்றும் குயப்டோவிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பிய ஆயர் பேரவை, உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்கள் ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியதுடன், அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும் உறுதியளித்துள்ளது.

மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேசம் ஒரே குடும்பமாக தாராள மனதுடனும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து உணவு வங்கிகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் தங்கள் உதவிப் பணிகளைத் தொடங்கியுள்ளன.

பாதுகாப்பு ஆய்வுகளுக்காக பெரீரா, மனிசலெஸ், குயப்டோ, அர்மீனியா, கார்டகோ மற்றும் பியூனவென்ச்சுரா ஆகிய ஆறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

தீயணைப்பு வீரர்கள், மருத்துவக் குழுக்கள், குடிமைப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அதே வேளையில் அதிகாரிகள் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் சிக்கியிருக்கக் கூடியவர்களை மீட்கும் முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

12 ஆகஸ்ட் 2026, 15:34