தேடுதல்

அருளாளர் எட்வர்ட் புரோஃபிட்லிச் அருளாளர் எட்வர்ட் புரோஃபிட்லிச் 

அருளாளர் புரோஃபிட்லிச்சின் சாட்சியம்: துன்பத்தின் மத்தியில் நம்பிக்கையும் உயிர்த்தெழுதலும்

எஸ்டோனியாவின் கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் முதல்முறையாக, பேராயர் எட்வர்ட் புரோஃபிட்லிச், SJ அவர்கள் 2025 செப்டம்பர் 6 அன்று அருளாளராக அறிவிக்கப்பட்டார். அவரது அருளாளர் அறிவிப்பின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாட எஸ்டோனிய கத்தோலிக்கர்கள் தயாராகி வருகின்றனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று, பேராயர் எட்வர்ட் புரோஃபிட்லிச் (SJ) அவர்கள் அருளாளராக அறிவிக்கப்பட்டார். வடக்கு ஐரோப்பாவில் பால்டிக் கடலோரத்தில் அமைந்துள்ள எஸ்டோனியாவின் கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற இவ்விழாவின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, அந்நாட்டு கத்தோலிக்கர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

1942-இல் சோவியத் சிறை முகாமில் காலமான அருளாளர் புரோஃபிட்லிச், அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் எஸ்டோனிய மக்களுடனேயே தங்க முடிவு செய்து, அவர்களுக்குக் காட்டிய உண்மையுள்ள பற்றுறுதிக்காக நினைவுகூரப்படுகிறார்.

சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய நாடுகடத்தல்களின் போது எஸ்டோனிய மக்கள் அனுபவித்த துன்பங்களின் அடையாளமாக அருளாளர் புரோஃபிட்லிச் விளங்குகிறார் என்று தாலின் மறைமாவட்ட ஆயர் ஃபிலிப் ஜோர்டான் அவர்கள் வர்ணித்தார்.

கத்தோலிக்கர்கள் மிகச் சிறுபான்மையினராக உள்ள எஸ்டோனியாவில், அருளாளர் புரோஃபிட்லிச் தொடர்ந்து ஒரு முன்மாதிரியாகவும், விண்ணக வாழ்விற்கான பரிந்துரையாளராகவும் திகழ்கிறார் என்றும் அவர் கூறினார்.

மேலும், திருப்பீடத்திற்கான முன்னாள் எஸ்டோனிய தூதர் செலியா குனிங்காஸ்-சாக்பாக் அவர்கள், மனித மாண்பின் மீதான தாக்குதல்களும் அமைப்பு ரீதியான அநீதிகளும் இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன என்பதை எச்சரிக்கும் முக்கியச் செய்தியை, அருளாளர் புரோஃபிட்லிச்சின் அருளாளர் பட்டம் இன்றைய உலகிற்கு வழங்குகிறது என்று தெரிவித்தார்.

அருளாளர் புரோஃபிட்லிச்சின் சான்று வாழ்வு திருஅவையின் கூட்டுறவுப் பரிமாணத்தையும் விளக்குகிறது. உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து எஸ்டோனியாவில் கணிசமாக வளர்ந்துள்ள உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க சமூகங்கள், அவரது மறைசாட்சியத்தை நம்பிக்கை மற்றும் ஆன்மீக வலிமையின் ஆதாரமாகக் கருதுகின்றன.

வன்முறையும் மரணமும் இறுதியான முடிவு அல்ல; கடவுளும் உயிர்த்தெழுதலுமே இறுதி வெற்றி என்பதை அருளாளர் புரோஃபிட்லிச்சின் வாழ்வும் சாட்சியும் கிறிஸ்தவர்களுக்கு நினைவூட்டுகின்றன என்று அருள்பணி ரோமன் கிஹ்க் அவர்கள் வலியுறுத்தினார்.

அவர் புனிதராக அறிவிக்கப்படுவதற்காக எஸ்டோனிய கத்தோலிக்கர்கள் தொடர்ந்து இறைவேண்டல் செய்து வருகின்றனர். அவரது அருளாளர் அறிவிப்பு விழா நாட்டிற்குள்ளும் அதற்கு அப்பாலும் ஒரு புதிய ஆன்மீக வாழ்க்கையைத் தூண்டும் என்றும் நம்புகின்றனர். அவரது வழிபாட்டுமுறை நினைவு நாள் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஆகஸ்ட் 2026, 11:33