தேடுதல்

புனித அகுஸ்தினார் பேராலயத்தில் புனித மோனிக்காவின் திருப்பண்டங்கள் பாதுகாக்கப்படும் சிற்றாலயம். புனித அகுஸ்தினார் பேராலயத்தில் புனித மோனிக்காவின் திருப்பண்டங்கள் பாதுகாக்கப்படும் சிற்றாலயம்.  (© Roman Basilica of St Augustine)

உரோமில் புனித மோனிக்காவின் அருளீக்கங்கள்: வரலாற்றுப் பயணம்

புனித அகுஸ்தினாரின் தாயாரான புனித மோனிக்கா, கி.பி. 387ஆம் ஆண்டு ஆஸ்தியா திபெரினாவில் காலமானார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், 1430ஆம் ஆண்டு அகுஸ்தினிய துறவிகள் திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் அவர்களின் அனுமதியுடன் அவரது அருளீக்கங்களை ஆஸ்தியாவில் கண்டெடுத்து உரோமுக்குக் கொண்டு வந்தனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

புனித அகுஸ்தினாரின் தாயாரான புனித மோனிக்கா, கி.பி. 387 இல் இத்தாலியின் உரோம் நகரின் ஒரு கடலோரப் பகுதியான ஆஸ்தியா திபெரினாவில் காலமானார். அவரது கல்லறை பல நூற்றாண்டுகளாக அங்கேயே இருந்தது. 1945 இல் கண்டறியப்பட்ட தொல்பொருள் சான்றுகள் மூலம் ஆஸ்தியாவில் உள்ள புனித அவுரியா தேவாலயத்திற்கு அருகில் அவரது கல்லறை அமைந்திருந்த தொடக்க கால இடம் உறுதிப்படுத்தப்பட்டது.

1430 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அகுஸ்தினிய துறவிகள், திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் அவர்களின் அனுமதியோடு மோனிக்காவின் அருளீக்கங்களைத் தேடி, அவற்றை புனித அவுரியாவின் பீடத்தின் அடியில் கண்டெடுத்தனர். அதே ஆண்டின் குருத்தோலை ஞாயிறன்று அந்த அருளீக்கங்கள் உரோம் நகரத்திற்குக் கொண்டு வரப்பட்டு, தொடக்கத்தில் சான் திரிபோனே அகுஸ்தினிய தேவாலயத்தில் வைக்கப்பட்டன.

1455 ஆம் ஆண்டு, திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸ் அவர்களின் ஆட்சியில், அவரது அருளீக்கங்கள் காம்போ மார்சியோவில் உள்ள புனித அகுஸ்தினார் பெருங்கோவிலுக்கு மிகவும் விமரிசையாக மாற்றப்பட்டு, அங்கு அவரைக் கௌரவிக்கும் வகையில் ஒரு சிறப்புச் சிற்றாலயமும் நினைவிடமும் அமைக்கப்பட்டன.

1758 முதல் 1760ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பேராலயம் புதுப்பிக்கப்பட்டபோது, புனித மோனிக்காவின் அருளீக்கங்கள் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன. 1760 ஆகஸ்ட் 1ஆம் நாள் நடைபெற்ற அதிகாரப்பூர்வ ஆய்வில், அவரது பெயர் பொறிக்கப்பட்ட ஈயப் பதக்கம் உள்ளிட்ட அடையாளச் சான்றுகளின் அடிப்படையில் அந்த அருளீக்கங்கள் உறுதிசெய்யப்பட்டன.

இன்று, புனித மோனிக்காவின் அருளீக்கங்கள் உரோமில் உள்ள புனித அகுஸ்தினார் பெருங்கோவிலில் போற்றி வணங்கப்படுகின்றன. தாய்மை, செபம் மற்றும் மனவுறுதியின் முன்மாதிரியாகவும், அகுஸ்தீனிய சபையின் "புனிதத் தாயாகவும்" அவர் போற்றப்படுகிறார்; இவரது செபங்களும் கண்ணீருமே புனித அகுஸ்தினாரின் மனமாற்றத்தில் மிக முக்கியப் பங்காற்றின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

28 ஆகஸ்ட் 2026, 14:53