நேர்காணல்
மறைக்கல்வியில் பெற்றோரின் பங்களிப்பு
தொகுப்பாளர்:
அருட்தந்தையே, குழந்தைகளுக்கு மறைக்கல்வியில் இருக்கும் ஆர்வம், அடிப்படை ஜெபங்களை அவர்களுக்கு எவ்வாறு கற்றுக்கொடுக்கலாம் என்பது போன்ற பல்வேறு கருத்துகளை நீங்கள் நம்முடன் பகிர்ந்துகொண்டீர்கள். மீண்டும் ஒருமுறை நீங்கள் நம்மிடையே இருப்பதில் மகிழ்ச்சி. குழந்தைகள் தங்களுக்குள் இருக்கும் தன்னலம், “நான் மட்டுமே வெற்றி பெற வேண்டும்” என்ற எண்ணம் போன்றவற்றை எவ்வாறு கடந்து வர வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். குறிப்பாக, அடிப்படை ஜெபங்களை வெறுமனே மனப்பாடம் செய்வதைவிட, அவற்றின் பொருளைப் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்று அழகாகப் பகிர்ந்துகொண்டீர்கள்.
இப்போது நான் உங்களிடம் தெரிந்துகொள்ள விரும்புவது பெற்றோரின் பங்களிப்பு பற்றித்தான். குழந்தைகளுக்கு ஜெபங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்தாலும், அவர்களின் பெற்றோர் எந்த அளவிற்கு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்?
அருட்தந்தை:
இது சற்று சிக்கலான கேள்வி. இதற்கு ஒரே பதிலைச் சொல்ல முடியாது. ஒவ்வொரு மறைமாவட்டத்திலும், ஒவ்வொரு பங்கிலும் சூழ்நிலை வேறுபடுகிறது. உதாரணமாக, குழித்துறை மறைமாவட்டத்தில் பெற்றோர் மறைக்கல்வி என்ற ஒரு முயற்சி உள்ளது. சில இடங்களில் பெற்றோர்கள் அதிகமாகப் பங்கேற்கிறார்கள்; சில இடங்களில் குழந்தைகள் மறைக்கல்வி வகுப்புக்குச் செல்லும்போது பெற்றோர்களும் இணைந்து வருகின்றனர். ஆனால், குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உண்மையிலேயே இறைநம்பிக்கையில் வளர வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. சில நேரங்களில், “வழக்கமாகப் பங்கில் கலந்து கொண்டால் பரிசு கிடைக்கும்” என்பதற்காகவும் குழந்தைகள் வரலாம். சில பெற்றோர்களும் அதற்காகவே குழந்தைகளை ஊக்குவிக்கலாம். இருப்பினும், இதுபோன்ற வாய்ப்புகளையும் நாம் அவர்களின் இறைநம்பிக்கைப் பயிற்சிக்கான கருவிகளாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
உதாரணமாக, பல பங்குகளில் சிறுசேமிப்பு போன்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. குழந்தைகள் சேமித்த பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகளிடம் பகிர்வு, பொறுப்பு மற்றும் பிறர்மீது அக்கறை போன்ற கிறிஸ்தவ மதிப்புகளை வளர்க்கும் ஒரு பயிற்சியாக அமையலாம். கொரோனா காலத்தில், நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, நாங்கள் குடும்ப மறைக்கல்வி என்ற முயற்சியை மேற்கொண்டோம். வீட்டிலேயே பெற்றோர், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து, மறைக்கல்விப் பாடங்களைப் படித்து, அவற்றைப் பற்றி கலந்துரையாடும் முறையை அறிமுகப்படுத்தினோம். நற்செய்தியை அடிப்படையாகக் கொண்டு, பணியாளர்கள் அல்லது மறைக்கல்வி ஆசிரியர்கள் கூறிய கருத்துகளை குடும்பத்தினருடன் பகிர்ந்து, அவற்றை வாழ்க்கையில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதையும் கலந்துரையாடினோம். இவை அனைத்தும் நல்ல முயற்சிகள்தான். ஆனால், அவை எந்த அளவிற்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது இன்னும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது.
குழந்தைகளுக்கென்று ஒரு மறைக்கல்விப் பாடத்திட்டம் இருந்தாலும், குடும்பமே மறைக்கல்வியின் மிக முக்கியமான தளம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. குடும்பம்தான் முதல் சமூகம். அதற்குப் பிறகு அன்பியம், பின்னர் பங்கு. இந்த மூன்று தளங்களும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் குழந்தைகளின் இறைநம்பிக்கை ஆழமாக வளர முடியும். பெற்றோரில் பலர் தன்னார்வமாக இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எந்த ஊதியமும் இல்லை. எனவே, அவர்களிடம் அதிகமானவற்றை எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், சிலர் தங்களுடைய நேரத்தைச் செலவிட்டு, முன்தயாரிப்பு செய்து, குழந்தைகளுக்கான வகுப்புகளைச் சிறப்பாக நடத்துகிறார்கள். அவர்களிடம் படைப்பாற்றல் இருந்தால், விளையாட்டுகள் மற்றும் பல்வேறு செயல்பாடுகள் மூலமாகவும் மறைக்கல்விப் பாடங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியும். அதேபோல், பெற்றோர்களையும் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஒன்றாகச் சந்தித்து, அவர்களுடன் உரையாட வேண்டும். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்ல உறவு இருந்தால், அது குழந்தைகளின் வளர்ச்சியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். சில இடங்களில் பெற்றோர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள், குழந்தைகள் தொடர்பான சில சிக்கல்கள் போன்றவை இருக்கலாம். ஆனால், அவற்றை உரையாடல் மூலம் ஓரளவுக்குத் தீர்த்து, தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
முக்கியமாக, இறைநம்பிக்கைப் பயிற்சி என்பது ஒருவருடைய தனிப்பட்ட பணி அல்ல. அது ஒரு கூட்டு முயற்சி. அது மறைக்கல்வி ஆசிரியர்களின் பணி மட்டுமல்ல; பங்கின் பணி மட்டுமல்ல; அதில் பெற்றோருக்கும் மிக முக்கியமான பங்கு உள்ளது.
தொகுப்பாளர்:
மிகவும் அழகாகச் சொன்னீர்கள், அருட்தந்தையே. குழந்தைகள் இறைநம்பிக்கையில் வளர்வதற்கும், மறைக்கல்வி சிறப்பாக நடைபெறுவதற்கும் பெற்றோரின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியமானது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். மேலும், உங்கள் மறைமாவட்டத்தில் பெற்றோருக்கென்றே மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறுகின்றன என்பதையும், குழந்தைகளின் மறைக்கல்வி முடிந்த பிறகும் பெற்றோர்கள் தொடர்ந்து இறைநம்பிக்கையில் வளர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் பகிர்ந்துகொண்டீர்கள். இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பல பெற்றோருக்கும், இதுபோன்ற முயற்சிகளைத் தங்கள் குடும்பங்களிலும் மேற்கொள்ள இது ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று நம்புகிறோம்.
மறைக்கல்வியில் பெற்றோரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை இன்று நாம் அறிந்துகொண்டோம். இதை நமது வாழ்விலும் நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.