நேர்காணல்
மறைக்கல்வியில் ஆசிரியர்களின் பங்களிப்பும் பயிற்சியும்
அன்பு இதயங்களுக்கு இனிய வணக்கம்!
நான் உங்கள் அருள்சகோதரி பிரைடா. கடந்த நிகழ்வில், மறைக்கல்வி வகுப்புகளில் பெற்றோரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி நாம் அறிந்துகொண்டோம். தொடர்ந்து, மறைக்கல்வி ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து சில முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள அருட்தந்தை அவர்களை வரவேற்கிறோம்.
அருட்தந்தையே, மறைக்கல்வி ஆசிரியர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? அவர்கள் மாணவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?
முதலில், மறைக்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால், அவர்கள் மறைக்கல்வி என்றால் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். மறைக்கல்வி என்பது வெறுமனே செபங்களைக் கற்றுக்கொடுப்பதோ அல்லது ஒரு பாடத்தை விளக்குவதோ அல்ல. அது குழந்தைகளின் இறைநம்பிக்கையை வளர்க்கும் பயிற்சியாகும். எனவே, மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். குறிப்பாக, மனித உளவியல், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதல், கற்பிக்கும் முறைகள் மற்றும் நம்பிக்கையை வாழ்வோடு இணைத்துக் கற்றுக்கொடுக்கும் திறன் ஆகியவற்றில் பயிற்சி பெற வேண்டும்.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப கற்பிக்கும் முறையும் மாற வேண்டும். சிறு குழந்தைகளுக்கு நீண்ட கருத்துரைகளை வழங்குவதற்குப் பதிலாக, கதைகள், பாடல்கள், விளையாட்டுகள், படங்கள், செயல்பாடுகள் மற்றும் மாதிரிப் பொருட்கள் மூலம் கற்றுக்கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் எளிதாகக் கருத்துகளை உள்வாங்கிக்கொள்வார்கள். விளையாட்டுகளைப் பயன்படுத்தும்போதும் ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்ற போட்டியை மட்டும் உருவாக்காமல், அந்த விளையாட்டின் மூலம் ஒரு நற்செய்தியை அல்லது இறைநம்பிக்கையின் செய்தியை மாணவர்களுக்கு எவ்வாறு வழங்க முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான புதுப்பித்தல் பயிற்சிகள் அவசியம். ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் பாடத்திட்டம், கற்பிக்கும் முறைகள் மற்றும் மாணவர்களின் வயதுக்கேற்ற அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட வேண்டும். மறைக்கல்வி என்பது தேர்வுக்காகப் படிக்கும் ஒரு பாடம் அல்ல. அதன் நோக்கம், மாணவர்களின் அறிவை மட்டும் வளர்ப்பது அல்ல; அவர்களின் இறைநம்பிக்கை, ஆன்மிக வாழ்வு மற்றும் கிறிஸ்தவ மதிப்பீடுகளை வளர்ப்பதாகும். எனவே, மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றார்கள் என்பதைவிட, அவர்கள் கற்றுக்கொண்ட நம்பிக்கையை வாழ்க்கையில் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் அன்பான உறவை உருவாக்கி, அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களின் எண்ணங்களையும் கேள்விகளையும் புரிந்துகொண்டு வழிநடத்த வேண்டும். அப்போதுதான் மறைக்கல்வி வகுப்புகள் மாணவர்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்.
அன்பு இதயங்களே!
மறைக்கல்வி ஆசிரியர்களின் பங்களிப்பும், அவர்களுக்குத் தேவையான தொடர் பயிற்சியும் எவ்வளவு முக்கியமானவை என்பதை அருட்தந்தை அவர்கள் நம்முடன் தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.
மீண்டும் அடுத்த நிகழ்வில் உங்களைச் சந்திக்கும் வரை, உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் அருள்சகோதரி பிரைடா நன்றி!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.