செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த உலகளாவிய மாநாடு!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் தேவைகளுக்குச் செவிசாய்த்து அவற்றுக்கு ஏற்ப மாறுவதன் மூலம், "சந்திப்பின் மொழியை" கற்றுக்கொள்ளும் ஒரு சமூகமாக திருஅவை மாற வேண்டும் என்று பேராயர் ஜோஸ் டொமிங்கோ உல்லோவா மென்டிட்டா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு ஜூலை 8 முதல் 11 வரை பனாமா நகரில் நடைபெற்ற, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த முதல் உலகளாவிய மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பனாமா பேராயர் ஜோஸ் டொமிங்கோ உல்லோவா மென்டிட்டா அவர்கள், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"வன்முறைக் கலாச்சாரத்தை ஒன்றிணைந்து மாற்றுவோம்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், திருஅவைத் தலைவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு வல்லுநர்கள், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளோரின் உரிமைகளுக்காகப் பணியாற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமெரிக்காவிற்கான செவித்திறன் குறைபாடுள்ள கத்தோலிக்க இளைஞர் முன்முயற்சி (DCYIA), CEPROME மற்றும் பனாமா உயர் மறைமாவட்டம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
ஒன்பது நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், பாலியல் வன்முறையிலிருந்து தப்பிப் பிழைத்த செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் எதிர்கொள்ளும் தனிமைப்படுத்தப்படுதல், தகவல் தொடர்புத் தடைகள், எளிதில் அணுகக்கூடிய புகார் அளிக்கும் அமைப்புகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எடுத்துரைத்தனர்.
இந்த மாநாட்டில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் கலாச்சாரம், பாதுகாப்புக் கொள்கைகள், திருஅவைச் சட்டம், பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு மற்றும் அணுகல்தன்மையின் முக்கியத்துவம் குறித்த விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. செவித்திறன் குறைபாடுள்ள பங்கேற்பாளர்களின் முழுப் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுடன் நான்கு சைகை மொழிகளிலும் அமர்வுகள் இடம்பெற்றன.
செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் பாதுகாப்பைப் பெறுபவர்கள் மட்டுமல்ல, பாதுகாப்பான சூழல்களை உருவாக்குவதில் தீவிரமாகப் பங்களிப்பவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தக் கூட்டம் நிறைவடைந்தது. எந்தவொரு குழந்தையோ அல்லது பாதிக்கப்படக்கூடிய நபரோ கவனிக்கப்படாமலோ அல்லது பாதுகாக்கப்படாமலோ விடப்படுவதில்லை என்பதை உறுதிசெய்ய உறுதிபூண்ட ஒரு உலகளாவிய வலையமைப்பையும் இந்த மாநாடு அறிமுகப்படுத்தியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.