தேடுதல்

பேராயர் ஃபிலிப் பாலோட் அவர்கள் பேராயர் ஃபிலிப் பாலோட் அவர்கள் 

திருத்தந்தையின் மெட்ஸ் நகர பயணம்: அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளம்

பிரான்ஸிற்கான தனது முதலாவது திருத்தூதுப் பயணத்தின் நிறைவாக, செப்டம்பர் 28 அன்று மெட்ஸ் நகருக்கு செல்லும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பிரான்ஸ்–ஜெர்மனி எல்லைப் பகுதியின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் இந்நகரில், ஆயுதமற்ற அமைதி, உரையாடல், சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பிரான்ஸிற்கான தனது முதலாவது திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பாரிஸ் மற்றும் லூர்து நகரங்களைத் தொடர்ந்து,  செப்டம்பர் 28 அன்று மெட்ஸ் நகரில் தனது பயணத்தை நிறைவு செய்வார்.

திருத்தந்தையின் வருகை குறித்து பேசிய மெட்ஸ் நகரின் பேராயர் ஃபிலிப் பாலோட் அவர்கள், நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரை பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு இடையிலான அமைதி, நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் வலிமையான அடையாளமாக விவரித்தார்.

ஒரு காலத்தில் போர்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட இந்த எல்லைப் பகுதி, தற்போது ஒத்துழைப்பு மற்றும் சகோதரத்துவத்தின் இடமாக மாறியுள்ளது. குறிப்பாக ஐரோப்பாவின் தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், திருத்தந்தையின் இந்த வருகை "ஆயுதங்களற்ற மற்றும் பகைமையை நீக்கும்" அமைதிக்கான அவரது அழைப்பை வலுப்படுத்தும் என்று பேராயர் பாலோட் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

செவிமடுத்தல், உரையாடல், புரிந்துகொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் மனித இதயங்களில் இருந்தே அமைதி தொடங்குகிறது என்று கூறிய அவர், "உலகம் வாழ்வைப் பெறுவதற்காக" என்ற கருப்பொருளைக் கொண்ட திருத்தந்தையின் இந்தப் பயணம், மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் மாண்பையும் பாதுகாப்பையும் எடுத்துரைக்கும் என்றும் தெரிவித்தார்.

வெவ்வேறு மதப் பின்னணியைக் கொண்ட 1,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் திருத்தந்தையின் வருகையை முன்னிட்டு தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் உள்ள இளைஞர்களிடையே இறைநம்பிக்கையின் மீது மீண்டும் ஆர்வம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய பேராயர் பாலோட் அவர்கள், அவரது மறைமாவட்டத்தில், "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆக இருந்த, கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளைப் பயின்று வருபவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 200 ஆக உயர்ந்துள்ளது" என்றும் கூறினார்.

கடுமையான விதிகளையும் அமைப்புகளையும் திணிப்பதற்குப் பதிலாக, உடனிருத்தல், நல்லுறவு மற்றும் உரையாடல் ஆகியவற்றின் மூலம் இளைஞர்களை வழிநடத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

திருத்தந்தையின் இந்தப் பயணம் ஐரோப்பாவிற்கும் உலகிற்கும் அமைதி, சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கையின் வலுவான செய்தியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஆகஸ்ட் 2026, 14:02