சியோல் 2027 உலக இளைஞர் தினத்தின் அதிகாரப்பூர்வப் பாடல் வெளியீடு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
தென் கொரியாவின் சியோல் நகரில் இடப்பெறவுள்ள 2027 உலக இளைஞர் தினத்திற்கு (World Youth Day - WYD) இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், யோவான் நற்செய்தியின் 16:33-ஆவது இறைவார்த்தையால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட "துணிவு கொள்ளுங்கள்! நான் உலகத்தை வென்றுவிட்டேன்" என்ற அதன் அதிகாரப்பூர்வமான பாடலை (Confidite, Ego Vici Mundum) ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 முதல் 8 வரை இடம்பெற உள்ள இந்த நிகழ்வில் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான இளம் கத்தோலிக்கர்கள் ஒன்றிணைய உள்ளனர்.
கொரிய இசைக்கலைஞர் பிரான்சிஸ் ஜியூன் கிம் (Francis Jiyoon Kim) இசையமைத்த இந்தப் பாடல் கொரியன், ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் மற்றும் இத்தாலிய மொழிகளில் பாடப்பட்டுள்ளது. பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் நவீன பாப் என இரண்டு வடிவங்களிலும் உருவாக்கப்பட்ட இப்பாடல், கொரிய பாரம்பரிய இசைக்கருவிகளை சமகால இசையுடன் ஒன்றிணைத்து அந்நாட்டின் கலாச்சாரத்தையும் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 294 பதிவுகள் உள்பட 434 படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பாடலுக்கு, வத்திக்கானின் 'பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்விற்கான திருப்பீடத் துறை' (Dicastery for Laity, Family and Life) ஒப்புதல் அளித்துள்ளது. இப்பாடலின் காணொளியானது சியோல் நகரின் முக்கிய அடையாளங்களை முன்னிலைப்படுத்துவதோடு, அதனை நடத்தும் நகரத்தைப் பற்றிய சுருக்கமான பார்வையையும் வழங்குகிறது.
2027 ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் "மறைமாவட்ட நாட்கள்" நிகழ்வில், திருப்பயணிகள் கொரியாவின் பல்வேறு பங்குகளிலும் கத்தோலிக்கக் குடும்பங்களிலும் தங்கியிருந்து, உள்ளூர் திருஅவையின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் அனுபவிப்பர்.
இதற்கான பதிவு அக்டோபர் 2026-ல் தொடங்குகிறது, அதேவேளையில் கிட்டத்தட்ட 30,000 தன்னார்வலர்களும் 230 சியோல் பங்குத்தளங்களும் திருப்பயணிகளை கொரிய விருந்தோம்பலுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.