தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நற்செய்தி அறிவிக்கும் தான்சானியா அருள்சகோதரிகள்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
தான்சானியாவில் உள்ள 'உசம்பரா அன்னை' துறவற சபையின் அருள்சகோதரிகள் (COLU), கத்தோலிக்க நம்பிக்கையைப் பரப்பவும், நற்செய்தி அறிவிக்கவும், மக்களுக்குக் கல்வி புகட்டவும், இளைஞர்களை ஈர்க்கவும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
1954-இல் தொடங்கப்பட்ட இச்சபை, பாரம்பரியமாக நற்செய்தி அறிவிப்பு, கல்வி, மறைக்கல்வி மற்றும் இளைஞர் உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வந்தது. மாறும் தகவல் தொடர்பு சூழலுக்கு ஏற்ப, 2024 ஆம் ஆண்டு ஜூலையில் டாங்கா எனும் பகுதியில் உள்ள லுஷோட்டோவில் 'உசம்பரா மவுண்டன் டிவி' (UMTV) என்ற தொலைக்காட்சியை இந்த அருள்சகோதரிகள் தொடங்கினர்.
தொலைக்காட்சி, வலையொளி மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, UMTV மறைக்கல்வி நிகழ்ச்சிகள், கத்தோலிக்க நம்பிக்கைச் சிந்தனைகள் மற்றும் இளைஞர்கள், சமுதாயம், கலாச்சாரம், ஆன்மீகம், அன்றாட வாழ்க்கை குறித்த கலந்துரையாடல்களை வழங்கி வருகிறது. நேரில் செல்ல முடியாத இடங்களிலுள்ள மக்களையும், குறிப்பாக இணையத்தில் நல்வழிதேடும் இளைஞர்களையும் சென்றடைய இத்தளம் அவர்களுக்கு உதவுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள UMTV-இன் இயக்குநரான சகோதரி பாவ்லினா T. ம்ஷானா அவர்கள், தொழில்நுட்ப ஊடகப் பணிகள் ஆண்களுக்கு மட்டுமே உரியவை என்ற கருத்துக்கு சவால் விடுத்து, அருள்சகோதரிகளும் நற்செய்தியைப் பரப்ப நவீன ஊடகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.
திருஅவையின் பிற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு வளர்ந்துள்ள இம்முயற்சி, ஒரு எளிய வலையொளிப் பக்கத்தில் இருந்து கட்டமைப்புடன் கூடிய ஒரு தொலைக்காட்சித் தளமாக பரிணமித்துள்ளது.
இருப்பினும், போதிய உபகரணங்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை, நிலையற்ற இணைய சேவை, அதிக எண்ணிமச் செலவுகள் மற்றும் மின்தடை போன்ற சவால்களை UMTV எதிர்கொண்டு வருகிறது.
இந்தச் சிரமங்களுக்கு மத்தியிலும், எண்ணிம உலகில் மக்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள உதவும் வகையில், நற்செய்தி அறிவிப்பு, கல்வி மற்றும் இளைஞர் உருவாக்கத்திற்கான ஒரு நவீன கருவியாக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் இந்த அருள்சகோதரிகள் உறுதியுடன் உள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.