தேடுதல்

புதிய திருமடலை வெளியிட்டு, உரை வழங்கிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் புதிய திருமடலை வெளியிட்டு, உரை வழங்கிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

திருமடல் வெளியீட்டு நிகழ்வில், கர்தினால் பரோலின்

உரையாடல்களை, ஒவ்வொரு நிலையிலும் நாம் மேற்கொண்டால், இவ்வுலகம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மேம்படும் - கர்தினால் பரோலின்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

"அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற, திருத்தந்தையின் புதிய திருமடலை பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டு, உரை வழங்கிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உடன்பிறந்தநிலை வழியாக நாம் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் அன்புகூரவேண்டும் என திருத்தந்தை இத்திருமடலில் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மனித உடன்பிறந்த நிலை என்பது ஒரு நவீன கவர்ச்சி போக்கு அல்ல, மாறாக, அனைத்துலக உறவுகளில் மேற்கொள்ளப்படவேண்டிய உடன்பிறந்தநிலையின் கலாச்சாரம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த புதிய ஏடு சுட்டிக்காட்டி நிற்கின்றது என்றார் கர்தினால் பரோலின்.

உடன் பிறந்தநிலை எனும் பண்பாடு செயல்படுத்தப்பட்டால், அது நாடுகளிடையே ஒன்றிப்புக்கும், ஆயுதங்களை அடக்கியாளும் அதிகாரத்தை கொள்வதற்கும், உரையாடல்களை ஊக்குவித்து, அனைத்து ஆயுதங்களையும் விட வலிமை வாய்ந்த ஆயுதமாக செயல்பட்டு நன்மைகளைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும் என்று, திருத்தந்தை இத்திருமடலில் கூறியள்ள கருத்தையும் எடுத்துரைத்தார், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்.

உரையாடல்களே, இதயத்திலும் உள்ளத்திலும் நிலவும் தடைகளை அகற்றி, மன்னிப்புக்கும் ஒப்புரவுக்கும் வழிவகுக்கிறது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், "Fratelli tutti" திருமடலில் கூறியுள்ளபடி, உரையாடல்களை, ஒவ்வொரு நிலையிலும் நாம் மேற்கொண்டால், இவ்வுலகம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மேம்படும் எனவும் கூறினார்.

மனித உடன்பிறந்தநிலை என்ற உணர்வு தனிமனிதரில் துவங்கி, குடும்பம், சமுதாயம், நாடு என வளர்ந்து அனைத்துலக சமுதாயத்தை எட்டுகிறது என்பதை இத்திருமடல் சுட்டிக்காட்டுவதை எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

பொதுநலனுக்கும் தேசியநலனுக்கும் இடையே வெளிப்படையாகத் தெரியும் முரண்பாடுகள் குறித்தும் இத்திருமடலில் உரைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், உண்மையான ஒருமைப்பாட்டுணர்வைக் கொண்டு, அனைத்துலக சமுதாயத்தின் அமைப்பு முறைகளையும் அவைகளுக்குள் காணப்படும் உறவு நிலைகளையும் மாற்றியமைக்க நல்மனம்  படைத்தோரின் தேவை குறித்தும் இம்மடல் உரைப்பதாகத் தெரிவித்தார்

திருத்தந்தையின் மனித உடன்பிறந்தநிலை என்பது, நியாயமான வழியில் வெளிப்படுத்தப்பட்ட பொதுவிருப்பம் மதிக்கப்படுவதை அனுமதிக்கும் ஒரு கலாச்சாரம் என்பதையும் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 அக்டோபர் 2020, 15:02