தேடுதல்

இராணுவ வான் தாக்குதலுக்கு உள்ளான கல்வி நிலையம் இராணுவ வான் தாக்குதலுக்கு உள்ளான கல்வி நிலையம் 

மியான்மார், உக்ரைன், காமரூனில் அமைதி நிலவ அழைப்பு

இரஷ்யா தன் எல்லையில் கூடுதலாக மூன்று இலட்சம் போர்க்காலப் படைவீரர்களை அனுப்பத் திட்டமிட்டுவரும்வேளை, இரஷ்யப் படைகள் சரணடையுமாறு உக்ரைன் அரசுத்தலைவர் வலியுறுத்தியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

மியான்மார், உக்ரைன், காமரூன் ஆகிய நாடுகளில் துயருறும் மக்களுக்கு அமைதி கிடைப்பதற்கு உலகளாவிய சமுதாயம் ஆவன செய்யுமாறு, இஞ்ஞாயிறன்று அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மியான்மார்

செப்டம்பர் 25, இஞ்ஞாயிறன்று இத்தாலியின் மத்தேரா நகரில், 27வது தேசிய திருநற்கருணை மாநாட்டின் நிறைவு திருப்பலியை நிறைவேற்றி ஞாயிறு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராண்டுகளுக்கு மேலாக, ஆயுதத் தாக்குதல்களால் மிகவும் துயருறும் உன்னத நாடாகிய மியான்மாரில் இவ்வாரத்தில் குண்டு போடப்பட்ட ஒரு பள்ளியில் இறந்த சிறார் மற்றும், காயமடைந்தோரின் கதறும் குரல்களைக் கேட்டேன் என்று கூறியுள்ளார்.

இச்சிறியோரின் அழுகுரல் கேட்கப்படாமல் இருக்கக் கூடாது மற்றும், இத்தகைய கொடுந்துயரங்கள் இடம்பெறக் கூடாது என்று கூறியுள்ள திருத்தந்தை, தொடர்ந்து இடம்பெறும் வன்முறையால் இறப்பையும் புலம்பெயர்வையும் எதிர்கொள்ளும் மியான்மார் மக்களின் வேதனைகள் மறக்கப்படவோ புறக்கணிக்கப்படவோ கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைன்

ஏழு மாதங்களாக போர் இடம்பெறும் உக்ரைன் மக்களோடு தனது அருகாமை மற்றும், அக்கறையை வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரை முடிவுக்குக்கொணர உறுதியான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படுமாறு உலகளாவியத் தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இரஷ்யா தன் எல்லையில் கூடுதலாக மூன்று இலட்சம் போர்க்காலப் படைவீரர்களை அனுப்பத் திட்டமிட்டுவரும்வேளை, இரஷ்யப் படைகள் சரணடையுமாறு வலியுறுத்தியுள்ள உக்ரைன் அரசுத்தலைவர், அவர்கள் பண்பட்ட முறையில் நடத்தப்படுவார்கள் என்றும் உறுதி கூறியுள்ளார்.

இச்சூழலில் திருத்தந்தையும் உக்ரைனின் அமைதிக்காக விண்ணப்பித்துள்ளார். 

காமரூன்

காமரூனில் ஐந்து அருள்பணியாளர்கள், ஓர் அருள்சகோதரி உட்பட எட்டுப்பேர் கடத்தப்பட்டிருக்கும்வேளை, அவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்பும் அந்நாட்டு ஆயர்களோடு தானும் இணைந்து குரல் எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேற்கு ஆப்ரிக்க நாடான காமரூனில் கடந்த வெள்ளியன்று ஆலயம் ஒன்றிற்குத் தீ வைத்த நபர்கள், இந்த 8 பேரையும் கடத்தியுள்ளனர் என்று, Mamfe மறைமாவட்ட ஆயர் கூறியுள்ளார்.

காமரூனின் தென்மேற்கிலுள்ள Mamfe மறைமாவட்டம், 2017ஆம் ஆண்டிலிருந்து புரட்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே போர் இடம்பெற்றுவரும் பகுதிகளில் ஒன்றாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2022, 13:17