தேடுதல்

அணு ஆயுதப் பரிசோதனை(2019.03.14) அணு ஆயுதப் பரிசோதனை(2019.03.14)  

அணு ஆயுதங்களுக்கு எதிராக திருத்தந்தை கண்டனம்

Stockholm உலகளாவிய அமைதி ஆய்வு நிறுவனத்தின் அறிவிப்பின்படி, 2021ஆம் ஆண்டில், உலகில் 13,080 அணு ஆயுதங்கள் சேமிப்பில் இருந்தன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

போரின் நோக்கங்களுக்காக அணு சக்தியைப் பயன்படுத்துவது எக்காலத்தையும்விட இக்காலத்தில் மனித மாண்புக்கு எதிரானது மட்டுமல்ல, நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தின் வருங்காலத்திற்கும் எதிரான குற்றம் என்பதை மீண்டும் அறிவிக்க  விரும்புகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 26, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட அணு ஆயுதங்கள் ஒழிப்பு உலக நாளை முன்னிட்டு, அமைதி, அணு ஆயுதக் களைவு, படைப்பின் காலம், (#Peace #NuclearDisarmament #TimeofCreation) ஆகிய மூன்று ஹாஷ்டாக்குகளுடன் இத்திங்களன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில் அணு ஆயுதங்களுக்கு எதிரான தன் கண்டனத்தை மீண்டும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போர்க்காலத்திற்காக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது, இப்பூமிக்கோளத்தின் வருங்கால வளர்ச்சியை இயலக்கூடியதாக்குகின்ற அனைத்திற்கும் எதிரானது என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2013ஆம் ஆண்டு டிசம்பரில் அணு ஆயுதங்கள் ஒழிப்பு உலக நாளை உருவாக்கி, அந்நாள் செப்டம்பர் 26ம் தேதி கடைப்பிடிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டது.

Stockholm உலகளாவிய அமைதி ஆய்வு நிறுவனத்தின் அறிவிப்பின்படி, 2021ஆம் ஆண்டில், உலகில் 13,080 அணு ஆயுதங்கள் சேமிப்பில் இருந்தன, இவற்றில் 90 விழுக்காட்டுக்குமேலான ஆயுதங்களை, அமெரிக்க ஐக்கிய நாடும் இரஷ்யாவும் வைத்துள்ளன. இவற்றில் ஏறத்தாழ முப்பது விழுக்காடு, இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்றன. 

மேலும், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் Cartagena de Indiasல் அரசுக்கும், FARC புரட்சிக் குழுவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதோடு, அந்நாட்டில் இடம்பெற்ற ஐம்பது வருட உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வந்தது. அந்நினைவு நாள் கொலம்பியாவில் இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2022, 15:09