தேடுதல்

கிறிஸ்தவ ஒன்றிப்புச்சார் பிரிதிநிதிகளைத் திருப்பிப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை கிறிஸ்தவ ஒன்றிப்புச்சார் பிரிதிநிதிகளைத் திருப்பிப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

திருத்தூதர்சார் பேரார்வத்தை வளர்த்துக்கொள்வோம் : திருத்தந்தை

ஒற்றுமைக்குச் சான்று பகராமல், நமக்காகப் பிறந்து, இறந்து, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க முடியாது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தொலைவில் இருப்பவர்களை அன்பு கூர்வதிலும், அவர்களை நம்பிக்கையோடு தேடுவதிலும் நாம் ஒருபோதும் சோர்வடையாமல் இருப்போம் என்றும், இயேசுவைப் பற்றி அறிவிக்கவும், அவர் விரும்பும் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் ஆழ்ந்த மற்றும் தீவிரமான விருப்பத்தை நாம் வளர்த்துக் கொள்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 19, இவ்வியாழனன்று, பின்லாந்தின் கிறிஸ்தவ ஒன்றிப்புச்சார் பிரிதிநிதிகளை திருப்பிப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவில் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான திருத்தூதர்சார் பேரார்வத்தைப் புதுப்பித்துக்கொள்வோம் என்றும் கூறினார்.

இந்நாள்களில் இயேசுவின் திருமுழுக்குக் குறித்துத் தியானித்து வருகின்றோம் என்றும், இறைத்தந்தையின் ஒரே மகனாகிய இயேசு, தனது பணிவாழ்வைத் தொடங்குவதற்கு முன்பு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றது, மனித மீட்புக்காகத் தன்னையே முழுமையாகக் கையளித்ததையே காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவ்வாறே, கடவுளின் தூய அருளால் இயேசுவில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் ஒரே இறைத்தந்தையின் பிள்ளைகளாகவும் இயேசுவின் உருவில் ஒரே சகோதரர் சகோதரிகளாகவும் வாழ்ந்து வருகின்றோம் என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவில் ஒப்புரவான மகன்கள் மற்றும் மகள்கள் என்ற வகையில், நமக்குள்ளேயே நாம் ஒப்புரவாகிட அயராது உழைக்கவும், நம் உலகில் நாம் ஒப்புரவின் பணியாளர்களாக இருக்கவும் அழைக்கப்படுகிறோம் என்றும் விவரித்தார்.

“நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்” (எசா 1:17) என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள், நாம் பெற்ற திருமுழுக்கின் வழியாக  நீதியின் செயல்களைச் செய்வதற்கும், அநீதி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பல்வேறு வகையான அடக்குமுறைகளால், குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமான உறுதியான உடனிருப்பை வழங்குவதற்கும் அழைப்புவிடுக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவார்த்தையை அறிவிப்பதற்கான பேரார்வம் நம்மிடையே துலங்கவேண்டும் என்றும், இந்த நற்செய்தி அறிவிப்பே நம்மை ஒரே சகோதரர் சகோதரிகளாக ஒன்றித்து வாழத் தூண்டுகிறது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒற்றுமைக்குச் சான்று பகராமல், நமக்காகப் பிறந்து, இறந்து, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2023, 13:43