நாம் எழுந்து மீண்டும் நடைபோடுவதையே இயேசு எதிர்பார்க்கிறார்

திருத்தந்தை : அனைத்தையும் இழந்துவிட்டதாக எண்ணி நாம் மனம் சோர்ந்துப்போகும் நிலையில், இறைவன் தன் அளவற்ற வல்லமையால் நம்மை மீட்டெடுக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

குழந்தையாக நாம் நடக்கக் கற்றுக்கொண்டபோது எப்படியிருந்தோமோ, அதுபோல், தற்போதும் இறைவனின் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவரின் வழி நடத்தலில் நடைபோடுவோம் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என இலாசரை இயேசு உயிர்ப்பிக்கும் நிகழ்வை விவரிக்கும் ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து, மார்ச் 26 ஞாயிறு, தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரையில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு சிரமமான வேளையிலும் நாம் எழுந்து நின்று மீண்டும் நடைபோடுவதையே இயேசு எதிர்பார்க்கிறார் என கூறினார்.

அனைத்தையும் இழந்துவிட்டதாக எண்ணி நாம் மனம் சோர்ந்துப்போகும் நிலையில், இறைவன் தன் அளவற்ற வல்லமையால் நம்மை மீட்டெடுக்கிறார் என உரைத்த திருத்தந்தை, அனைத்து நம்பிக்கைகளும் இழந்துவிட்ட நிலையிலும், இலாசரை உயிர்ப்பித்த இயேசு, நம்மையும் காக்கிறார் என உரைத்தார்.  

வலி தரும் இழப்புகளாலும், நோயாலும், கசப்பான ஏமாற்றங்களாலும், நம்பிக்கைத் துரோகம் போன்றவைகளாலும் நாம் நம்பிக்கையிழக்கும்போதும், நம்பிக்கையிழந்த மக்களை சந்திக்கும்போதும், ஒரு மூடப்பட்ட கல்லறைக்குள் இருளின் நடுவில் இருப்பதுபோல் தோன்றலாம், ஆனால், உண்மையில் நாம் தனியாக இல்லை, இயேசு இத்தருணங்களில் நம் அருகில் இருந்து நமக்கு வாழ்வளிக்கிறார் என உரைத்தார்.

எதிர்மறை எண்ணங்களால் நாம் ஒரு நாளும் நசுக்கப்படக் கூடாது,  ஏனெனில், கடவுளை விசுவசிப்பது, மற்றும் அவரில் நம்பிக்கைக் கொள்வது என்பது இதிலிருந்து நம்மைக் காக்கும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

கல்லைப் புரட்டுங்கள், அதனுள் உள்ளவை அனைத்தையும் என்னிடம் நம்பிக்கையுடன் அச்சமின்றித் தாருங்கள், நான் உங்களுடன் உள்ளேன், உங்களை வாழவைப்பேன், என நம் ஒவ்வொருவரிடமும் இயேசு கூறுகிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் பலவேளைகளில் எழும்பி நடக்கும் சக்தியின்றி மனம் தளர்ந்திருக்கிறோம், ஆனால், நாம் நடந்து முன்னேறிச் செல்லவேண்டும், என ஊக்கமளித்து, நான் உன்னுடன் இருக்கிறேன் என இயேசு நம் ஒவ்வொருவரையும் நோக்கிக் கூறுகிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையின்மை, அச்சம், சோக அனுபவங்கள், போன்று நம்மைத் தளரவைக்கும் கட்டுக்களை அறுத்தெறிந்து, நம்பிக்கையை இறக்கவிடாமல், வாழ்வுக்குத் திரும்புங்கள் என புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளிடம் அழைப்புவிடுத்தார்.

இதயத்தில் சுமைகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், இயேசுவை நோக்கி அவைகளைத் திறந்து, அவர் அன்பினை கண்ணாடி ஒளியில் பெற்று, அதனை நம் வாழ்வின் நடவடிக்கைகளிலும் வார்த்தைகளிலும் பிரதிபலிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

பாவிகளாயிருக்கும் நாம் அனைவரும், கடவுள் நம்மை மன்னிப்பதுபோல், நாமும் ஒருவர் ஒருவரை மன்னிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மார்ச் 2023, 14:08

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >