தன்னை நமக்காகக் கையளித்தவர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுள் தன்னை நமக்கு வெளிப்படுத்தி மீட்கின்றார், உடன்வருபவராக, ஆசிரியராக, மருத்துவராக, தன்னை நமக்குக் கையளிக்கின்றார் என்றும், நற்கருணை வழியாக தனது உடலை நமக்காக உடைத்துக் கொடுத்தார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 14, ஞாயிறன்று திருச்சிலுவை மகிமையின் நாளை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இறைத்தந்தையின் பணியை நிறைவேற்ற, மனிதர்கள் இதுவரை கண்டுபிடித்த மிகக் கொடூரமான கருவிகளில் ஒன்றான சிலுவையை இயேசு பயன்படுத்தினார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அத்தகைய மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாளே திருச்சிலுவையின் மகிமைக்கான நாள் என்றும் கூறினார்.
மரணத்திற்கான வழியை வாழ்க்கையின் கருவியாக மாற்றிய கடவுளின் மகத்தான அன்பிற்காக நாம் இந்நாளைக் கொண்டாடுகின்றோம் என்றும், சிலுவைச் சாவை நம் மீட்பிற்காக ஏற்றுக்கொண்டதற்காகவும், அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்பதற்காகவும், அவருடைய அன்பு நம் பாவத்தை விட பெரியது என்றும் நமக்குக் கற்பித்ததற்காகவும் திருச்சிலுவை மகிமை நாள் கொண்டாடப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
கல்வாரியில் தன் மகனுக்கு அருகில் இருந்த தாயான அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக அவருடைய மகனின் மீட்பளிக்கும் அன்பு நம்மில் வேரூன்றி வளரட்டும் என்றும், தன்னை முழுமையாக நம் அனைவருக்கும் இயேசு கொடுத்தது போல, ஒருவருக்கொருவர் நம்மை நாம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து அறிந்துகொள்ள அன்னையின் துணை நாடுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
நான்காம் நூற்றாண்டில் எருசலேமில் புனித ஹெலன் திருச்சிலுவையைக் கண்டுபிடித்ததையும், பேரரசர் ஹெராக்ளியஸால் விலைமதிப்பற்ற நினைவுச்சின்னம் புனித நகரத்திற்குத் திரும்பியதையும் நினைவுகூரும் வகையில் திருச்சிலுவையின் மகிமை நாள் கொண்டாடப்படுகின்றது என்றும், பழைய ஏற்பாட்டில் மோசேயால் உயர்த்தப்பட்ட வெண்கலப்பாம்பு மக்களைக் காப்பாற்றியது போல சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு நமது மீட்பின் அடையாளமாக இருக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்