புனித பூமியில் அமைதிக்கான ஒப்பந்தம் நம்பிக்கையின் அடையாளம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அண்மைய நாள்களில், அமைதிச் செயல்முறையின் தொடக்கத்திற்கான ஒப்பந்தம் புனித பூமியில் நம்பிக்கையின் தீப்பொறியைக் கொடுத்துள்ளது என்றும், இஸ்ரயேலிய மற்றும் பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்களை மதிக்கின்ற, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நோக்கி, அவர்கள் வகுத்த பாதையில் துணிவுடன் தொடர ஊக்குவிக்கின்றேன் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 12, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மரியன்னை ஆன்மிகத்தாருக்கான யூபிலியில் பங்கேற்கும் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற மோதல்கள் எல்லா இடங்களிலும் இறப்பையும் அழிவையும் விட்டுச் சென்றுள்ளன என்றும், குறிப்பாக தங்கள் குழந்தைகள், பெற்றோர்கள், நண்பர்கள், அனைத்தையும் இழந்தவர்களின் அருகில் தான் உடனிருக்கின்றேன் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
முழு திருஅவையுடனும், துன்புறும் மக்கள் அருகில் தான் இருப்பதாக தெரிவித்த திருத்தந்தை அவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவனின் அரவணைப்பு துன்புறும் ஒவ்வொரு மக்களை நோக்கியும் செலுத்தப்படுகிறது என்றும், இருண்ட இருளிலும் கூட, கடவுள் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்ற உறுதியை நமக்கு வழங்குகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
"Dilexi te - நான் உன்னை அன்பு செய்தேன் என்ற திருமடல் குறித்த கருத்துக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், மனிதகுலத்தின் ஒரே அமைதியான கடவுளிடம், அனைத்து காயங்களையும் குணப்படுத்தவும், மனிதனால் சாத்தியமற்றதாகத் தோன்றும் ஒன்றை நிறைவேற்ற அவரது அருளை நாடவும் தொடர்ந்து இறைவனின் உதவியை நாடி செபிப்போம் என்றும் கூறினார்.
மற்றவர்கள் நமக்கு ஓர் எதிரி அல்ல, மாறாக ஒரு சகோதரன் அல்லது சகோதரி என்ற மனநிலையில் அவர்களைப் பார்த்து, மன்னித்து, நல்லிணக்கத்திற்கான நம்பிக்கையை வழங்குவதை மீண்டும் கண்டறிய வலியுறுத்தினார் திருத்தந்தை.
உக்ரைனில் பல நகரங்கள் மற்றும் பொதுமக்கள் வாழும் உள்கட்டமைப்புக்கள் தாக்கப்பட்டுள்ளன, குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் இறந்துள்ளனர் என்று குறிப்பிட்ட திருத்தந்தை அவர்கள், பல குடும்பங்களுக்கு மின்சாரமின்மை, குளிர்போக்கும் வசதியின்மையையும் ஏற்படுத்திய புதிய வன்முறைத் தாக்குதல்கள் அறிந்து வருத்தமுறுவதாகவும், பல ஆண்டுகளாக வேதனையிலும் பற்றாக்குறையிலும் வாழ்ந்து வரும் மக்களின் துன்பங்களை எண்ணி தன் இதயம் இரங்குவதாகவும் எடுத்துரைத்தார்.
வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அழிவை நிறுத்தவும், உரையாடலுக்கும் அமைதிக்கும் நம் உள்ளங்களையும் செயல்பாடுகளையும் திறந்திடவும் தனது வேண்டுகோள்களையும் விண்ணப்பங்களையும் புதுப்பித்த திருத்தந்தை அவர்கள், அரசியல் மாற்றத்தினை உணரும் அன்பான பெருவியன் மக்களுக்கு தனது உடனிருப்பையும் வெளிப்படுத்தினார். நல்லிணக்கம், உரையாடல் மற்றும் தேசிய ஒற்றுமையின் பாதையில் பெருவியன் மக்கள் தங்கள் வாழ்வைத் தொடர வேண்டும் என்று தான் செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இத்தாலியில் பணியிட விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காகவும் அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும் செபிப்பதாகவும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்