இறையன்பைத் தேடுவது, கண்டுபிடிப்பது, மற்றும் வரவேற்பது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கடவுளை நாம் தேடவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக, அவரின் மதிப்பிடமுடியாத அன்பின் கொடையைக் கண்டுகொண்டு, அவரை நம் வாழ்வுக்குள் எப்போதும் வரவேற்பவர்களாகச் செயல்பட வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 30, ஞாயிற்றுக்கிழமையன்று புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் விலைமதிப்பற்ற அன்பைத் தேடுவது, கண்டுபிடிப்பது, மற்றும் வரவேற்பது குறித்து எடுத்துரைத்தார்.
மிகப்பெரும் மதிப்புடைய புதையலை நிலத்தில் கண்டுகொண்டவரும், விலைமதிப்பற்ற முத்தைக் கண்டுகொண்ட வணிகரும் தங்களுக்குள்ளதெல்லாம் விற்று அவைகளை வாங்கிக்கொள்ளப் பார்ப்பார்கள் என இஞ்ஞாயிறு தந்த நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறிய உவமைகள் குறித்து விளக்கமளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் இவர்களைப்போல் முதலில் தேடுவோம், பின் கண்டுகொள்வோம், அதன் பின் என்ன விலை கொடுத்தாகிலும் அதனைப் பெற்றுக்கொள்வோம் என விண்ணப்பித்தார்.
தன் வாழ்வில் தனக்குக் கிடைத்தவைகள் குறித்து நிறைவைக் கொண்டிருந்தாலும், அந்த வணிகர் இதையும் தாண்டி ஒன்றிருப்பதை அறிந்தவராக, தன் நன்மைத்தனத்தின் கனவை வளர்த்தவராக, புதிய ஒன்றை நோக்கி முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வணிகரைப்போல், வாழ்வை என்றும் புதுமையாக்கிக் கொண்டிருக்கும் இறைவனின் தன்மையை நாடவேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.
தனக்கான முத்தைத் தேடிக்கொண்டிருந்த வணிகர் அதனைக் கண்டுகொள்கிறான் ஏனெனில், அவர் பார்வை கூர்மையுடையதாக, விலைமதிப்புடைய முத்தைக் கண்டுகொள்வதில் திறமுடையதாக இருந்தது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் வாழ்வுக்குத் தேவையான விலைமதிப்பற்றவைகளைத் தேடவேண்டிய தேவையை உணர்ந்தவர்களாக, நமக்குத் தேவையற்றவைகளையும் தேவையானவைகளையும் இனம் கண்டுகொள்ள நாம் பயிற்சி பெறவேண்டும் என அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையற்றவைகளில் நேரத்தைச் செலவிடுவதை விடுத்து இறைவனோடும் அயலாரோடும் நம் சந்திப்பை ஊக்குவிக்கும் விலைமதிப்பற்ற முத்தை வாழ்வு வழங்குவதை கண்டுகொண்டு செயல்படுவோம் என கேட்டுக் கொண்டார்.
தன் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்திற்கு அர்த்தத்தை வழங்கும் செல்வத்திற்காக தனக்கு உள்ளதையெல்லாம் விற்று அதனை அடையும் வணிகர்போல் நாமும் நம் வாழ்வின் விலை உயர்ந்த முத்தான இயேசுவை நம்மோடு இணைத்துக்கொள்ள நமக்குரியதையெல்லாம் இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற அழைப்பையும் கத்தோலிக்க விசுவாசிகளுக்கு முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒருவர் இயேசுவை சந்திக்கும்போது, அவரின் வாழ்வே மாறுகிறது, ஏனெனில், கடவுளின் அன்பை தழுவிக் கொள்வதன் உயரிய அர்த்தத்தை அவர் கண்டுகொள்கிறார் என்ற திருத்தந்தை, நாமும் நம் வாழ்வில் கடவுளைத் தேடிக் கண்டுகொள்ளவும், நன்மைகளை ஆற்றவும் முயற்சி செய்கிறோமா என்ற கேள்வியை நமக்குள்ளேயேக் கேட்போம் எனவும் விண்ணப்பித்தார்.
உண்மையிலேயே கடவுளிடமிருந்து வரும் நன்மைத்தனங்கள் குறித்தும், அறிந்து ஆய்ந்துணர்ந்து, நமக்குத் தேவையற்றவைகளை தூக்கி வீச நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவை நம் வாழ்வின் மையமாகக் கொண்டுச் செயல்படுவோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரத்தில் போர்த்துக்கல்லின் லிஸ்பனில் இடம்பெறவிருக்கும் உலக இளையோர் மாநாட்டிற்கு தலைமை தாங்கச் செல்லும் தனக்காக அனைவரும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்