நன்மைத்தனங்களை அங்கீகரித்து அவைகளை வளர்க்க நாம் உதவ வேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இறைவனின் நன்மைத்தனம் வளர்ந்து மிகப்பெரும் விளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரால் நம்மிலும் மற்றவரிலும், இவ்வுலகிலும் விதைக்கப்பட்டதன் அழகை பார்க்கவும், பாராட்டவும் கற்றுக்கொள்ளும் வாழ்க்கைப் பண்பை வளர்த்துக் கொள்ள ஊக்கமளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான மூன்றாவது உலக தினத்தையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் ஜூலை 23, ஞாயிற்றுக்கிழமையன்று காலை திருப்பலி நிறைவேற்றியபின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாள் நற்செய்தி வாசகம் எடுத்துரைத்த, பயிரும் களைகளும் என்ற இயேசுவின் உவமை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
நல்விதைகளை விதைத்த விவசாயியின் நிலத்தில் தீயோன் இரவோடு இரவாக களைகளை விதைத்துவிட்டுச் சென்றதைப் பற்றிக் குறிப்பிடும் இவ்வுவமையை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகை பெரும் நிலமாக உருவகிக்கும் இயேசு, கடவுள் கோதுமை மணிகளைத் தூவிவிட்டுச் செல்ல, சாத்தானோ அங்கு களைகளை விதைத்திட இரண்டும் ஒன்றாகவே வளர்கின்றன, ஆனால் நாம் களைகளை பிடுங்க முனைகையில் நல்பயிர்களையும் பிடுங்கிவிடும் ஆபத்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
உலகம் என்னும் நிலத்தின் விதைகள் பற்றிக் குறிப்பிட்டு, இதயம் என்னும் நிலம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, நாமே நேரடியாகத் தலையிட்டு இதயத்தை சுத்தம் செய்யலாம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
முழுசுதந்திர பூமியான நம் இதயத்தில் களைகளும் கோதுமைப் பயிர்களும் நிறைந்து கிடப்பதை மனதில்கொண்டு, நன்மைத்தனத்தின் பயிர்களை கவனமுடன் வளர்க்கவும், களைகளை அகற்றுவதில் திறமையுடன் செயலாற்றவும் வேண்டும் என இறைவன் எதிர்பார்க்கிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமக்குள்ளேயே நாம் ஆன்ம சோதனைச் செய்து, நம் இதயம் என்னும் நிலத்தில் இறைவனின் ஒளியின் துணைகொண்டு நன்மை தீமைகளை ஆய்ந்து அறிய வேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு அடுத்திருப்பவர்களிடம் நாம் பலவேளைகளில் களைகளையே பார்க்கும் மனநிலைகளை விட்டொழித்து, அவர்களிடம் காணப்படும் நன்மைத்தனங்களை அங்கீகரித்து அவைகளை வளர்க்க நாம் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நம்மிலும், மற்றவரிலும், இவ்வுலகிலும் இறைவன் விதைத்துள்ள நன்மைத்தனங்களின் அழகை ஒவ்வொருவரும் கண்டுகொண்டு, நன்மைத்தனங்கள் இவ்வுலகில் வேர்விட்டு செழித்து வளர்வதையும், அறுவடைத் திருவிழாவையும் பார்க்க விளையும் இறைவிருப்பததைப் பூர்த்திச் செய்ய நாம் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மற்றவர்களைப் பற்றிய அவசர தீர்ப்புக்களை வழங்கி, அவர்களின் பலவீனங்களில் கவனம் செலுத்தி, அவர்களின் நன்மைத்தனங்களை கண்டுகொள்ளாமல் விடும் சோதனையிலிருந்து நாம் விலகி நிற்போம் என்ற திருத்தந்தை, நம் இதயத்தில் காணப்படும் களைகளைக் கண்டுகொண்டு அவைகளை இறைவனின் கருணை எனும் நெருப்பில் இடுவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.
நன்மைகளின் பெருவிளைச்சல் இவ்வுலகில் இடம்பெறவேண்டும் என நாம் அனைவரும் ஒன்றினணைந்து உழைப்போம் என்ற விண்ணப்பதுடன் தன் நண்பகல் மூவேளை செபவுரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்