தேடுதல்

மூவேளை செப உரையில் பங்கேற்ற மக்கள் மூவேளை செப உரையில் பங்கேற்ற மக்கள்  (ANSA)

புலம்பெயர்ந்தோர் நலவாழ்வுப்பணி நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால்

புலம்பெயர்ந்தோர் வாழ்வில் கவனம் செலுத்தும் செயல்முறைகள் எளிதானதல்ல என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவேண்டிய சவால்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மத்தியதரைக் கடலின் முக்கியமான நகரங்களில் ஒன்றான மார்சேய்லில் நடைபெரும் புலம்பெயர்ந்தோர் நலவாழ்விற்கான மத்திய தரைக்கடல் கூட்டத்தில் பங்கற்பதற்காக வெள்ளிக்கிழமை தான் மேற்கொள்ள இருக்கும் இரண்டு நாள் திருத்தூதுப் பயணம் நல்ல முறையில் நடைபெற செபிக்கும்படித் திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு அளித்த மூவேளை செப உரையின் முடிவில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர் வாழ்வில் கவனம் செலுத்தும் செயல்முறைகள் எளிதானதல்ல என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவேண்டிய சவால் என்றும் கூறினார்.

மனித மாண்பானது சகோதரத்துவத்தின் மீது கட்டமைக்கப்பட்டால் மட்டுமே, செழிப்படையும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது இந்த இரண்டு நாள் பயணம் நல்ல முறையில் நடைபெற தொடர்ந்து செபிக்கும்படியும் திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.  

கத்தோலிக்கத் தலத்திருஅவை தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து அமைதி, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் நடக்க இருக்கும் இக்கூட்டமானது நமது கடல் என்ற கருப்பொருளுடன் புலம்பெயர்ந்தோர் வாழ்வில் சிறப்பு கவனம் செலுத்த நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய தரைக்கடல் கூட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற தங்களது உழைப்பை தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிக்கவும் திருப்பயணிகளுக்கு அழைப்புவிடுத்தார்.

செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 2.45 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் மாலை 6.15 மணிக்கு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர், மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவற தலைவர்கள்  ஆகியோரை சந்திப்பு, மத்தியதரைக்கடல் பகுதியினருக்கான கூட்டத்தின் இறுதி பகுதியில் பங்கேற்றல், திருப்பலி ஆகியவற்றை நிறைவேற்ற உள்ளார்.

இரண்டு  நாள்களைக் கொண்ட இத்திருத்தூதுப் பயணத்தில் 3 உரைகள், ஒரு திருப்பலி மறையுரை உட்பட 4 உரைகளை ஆற்ற உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  மறுநாள் அதாவது செப்டம்பர் 23 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 8.50 மணிக்கு உரோம் விமான நிலையம் வந்தடைவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 செப்டம்பர் 2023, 13:24