ஒருங்கிணைந்த உலக ஆயர்கள் மாமன்ற தயாரிப்பிற்கான செபவழிபாடு
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவையின் ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்க இருக்கின்ற 16வது உலக ஆயர்கள் மாமன்றம் நல்ல முறையில் நடைபெறவும், தூய ஆவியின் ஆற்றல் பெற்று அதனைத் திறம்பட செயல்படுத்தவும் அருள்வேண்டி நடைபெற உள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாட்டிற்கு தலத்திரு அவை தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வரும் செப்டம்பர் 30 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான முன் தயாரிப்பு செபவழிபாடு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் தொடங்க உள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இச்செப வழிபாட்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தொலோமேயு, கண்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்ஃபி, தலத்திருஅவை தலைவர்கள், ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளர்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்த மக்கள், பங்கேற்க உள்ளனர்.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ள இச்செப வழிபாட்டில், ஒன்றிப்பின் கொடை, ஒருங்கிணைந்த பயணம், அயலார் என்னும் கொடை, அமைதி ஆகியவற்றின் அடையாளமாக நான்கு காணிக்கைகளும், இறைவார்த்தை, புகழ்பாடல்கள், மன்றாட்டுக்கள், தைசேயின் பாடல்கள் ஆகியவையும் இடம்பெற உள்ளன.
அமைதி, சகோதரத்துவ ஒற்றுமை ஆகியவற்றின் வலுவான அடையாளமாக நடைபெற இருக்கும் இவ்வழிபாட்டின் போதுபிரான்சிஸ்குவின் புனித தமியான் சிலுவை பீடத்தின் நடுவில் வைக்கப்பட்டும், வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகம் படைப்பின் காலத்தை அடையாளப்படுத்தும் விதமாக மரங்கள் செடிகள் மற்றும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட உள்ளது.
இச்செப வழிபாடானது இத்தாலிய தொலைக்காட்சியிலும் வலைதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.