தேடுதல்

பிரான்சிஸ்கன் சபை துறவியர் பிரான்சிஸ்கன் சபை துறவியர்   (AFP or licensors)

உலகில் உங்களின் விருதுவாக்கை வாழ்ந்து காட்டுங்கள்!

திருஅவையை ஆதரிப்பதிலும், முன்மாதிரியான வாழ்க்கையாலும், சான்றுபகர்தலாலும் அதனை சரிசெய்வதிலும் உறுதியுடன் இருங்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள உலகிற்குச் செல்வதன் வழியாகப்  பிரான்சிஸ்கன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் நிறுவுனரின் உடன்பிறந்த உறவு, கீழ்ப்படிதல் மற்றும் ஏழ்மை ஆகியவற்றின் விருதுவாக்கை உண்மையாகக் கடைபிடித்து வாழவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பிரான்சிஸ் அசிசியார் எழுதிய ஒழுங்குமுறையின் 800-ஆம் ஆண்டை (29.11.1223) அச்சபையினர் கொண்டாடும் வேளை இவ்வாறு அவர்களிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஏழ்மை மற்றும் உடன்பிறந்த உறவின் நற்செய்தியை இன்றைய உலகிற்குக் கொண்டு வருமாறும் அவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

பிரான்சிஸ்கன் துறவு சபையைச் சார்ந்த இருபால் துறவியரைப் பொறுத்தளவில், உலகம் முழுவதும் செல்வது என்பது அவர்களின் உடன்பிறந்த உறவு மற்றும் அமைதியான வாழ்க்கை பாணியில் தங்களின் பணியை உணர்ந்துகொள்வது மற்றும் வெளிச்செல்லும் திருஅவையாக இருக்க வேண்டும் என்ற அனைத்து கிறிஸ்தவர்களின் அழைப்புக்கு இணங்குவதாகவும் இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

நூற்றாண்டு விழா என்பது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வை நினைவுகூருவதற்கு  நல்லதொரு வாய்ப்பு என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு ஊக்கமளிக்கும் அதே உணர்வை மீட்டெடுக்கவும், பிறருக்காகத் தங்களையே கையளிக்கவும் இது தூண்டுகிறது என்று குறிப்பிட்ட திருத்தத்தை, இதனை நற்செய்தியில் வேரூன்றிய ஒரு தனித்துவமான மற்றும் விருதுவாக்கினை வாழ்ந்துகாட்டும் ஒரு வாழ்க்கை வடிவத்திற்கான பிறப்பு என்றும் விளக்கினார்.

புனித பிரான்சிஸ் அசிசியாரின் வழியில் அவரின் குடும்ப உறுப்பினர்களாகிய இருபால் துறவியரையும் ஏழ்மை, கீழ்ப்படிதல் மற்றும் நற்செய்தியைக் கடைப்பிடிக்கவும், தங்களுக்கென்று எதுவுமே இல்லாத நிலையில் கீழ்ப்படிதலுடனும் கற்புடனும் வாழ்ந்திடுமாறும் அறிவுறுத்தினார் திருத்தந்தை.  

மேலும் கிறிஸ்துவே உங்கள் ஆன்மிகத்தின் மையப்புள்ளி என்றும், அவருடைய பள்ளியில் நெறிமுறைகளையும் வாழ்க்கையையும் உண்மையாகக் கற்றுக் கொள்ளும் துறவிகளாக இருங்கள் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.

நற்செய்திக்குச் சான்று பகர்வதற்கும், ஏழ்மையின் பேரின்பத்தை பகிர்ந்துகொள்வதற்கும் உலகினில் செல்வதற்குத் தயங்கவேண்டாம் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாவற்றிலும் சுயநலம், இயற்கையையும் ஏழைகளையும் சுரண்டுதல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள போர்களாலும் மோதல்களாலும் சிதைந்துபோயுள்ள நமது உலகினை எடுத்துக்காட்டி, உண்மையில் நற்செய்திதான் ஒவ்வொரு மனிதருக்கும் நல்ல செய்தி என்பதை காட்டுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

800 ஆண்டுகளுக்கு முன்பு, புனித பிரான்சிஸ் அசிசியார், திருத்தந்தை மூன்றாம் Honorius அவர்களால் தனது சபையின் சட்டவிதிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 நவம்பர் 2023, 14:43