தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - நற்செய்தி அறிவிப்பு தூய ஆவியில் உள்ளது

டிசம்பர் 6 புதன் கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நற்செய்தி அறிவிப்பு என்பது தூய ஆவியில் நிலைபெற்றுள்ளது என்ற தலைப்பில் தனது மறைக்கல்விஉரைக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

டிசம்பர் 6 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நற்செய்தி அறிவிப்பு என்பது தூய ஆவியில் நிலைபெற்றுள்ளது என்ற தலைப்பில் தனது மறைக்கல்விஉரைக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் மாதத்தின் முதல் வாரமும் திருவருகைக் காலத்தின் முதல் வாரமுமாகிய இப்புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தையின் வருகைக்காக ஏராளமான திருப்பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊன்றுகோலின் உதவியுடன் அரங்கத்தின் மேடையில் மெல்ல நடந்து வரவே கரவொலி எழுப்பி திருத்தந்தையை அன்புடன் வரவேற்றனர் திருப்பயணிகள். மக்கள் அனைவரையும் புன்னகையுடன் வரவேற்று புதன் மறைக்கல்வி உரையினை சிலுவை அடையாளம் வரைந்து துவக்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து இயேசுவின் விண்ணேற்றம் பற்றிய கருத்துக்கள் இத்தாலியம், ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, இஸ்பானியம், ஆகிய பல மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

திருத்தூதர் பணி 1; 6-8  

பின்பு, அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால், தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.

இறைவார்த்தைகள் திருப்பயணிகளுக்கு வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களைக் கடந்த வாரத்தைப் போலவே இவ்வாரமும் பேரருள்திரு Filippo Ciampanelli திருத்தந்தையின் சார்பாக வாசித்தளித்தார். 

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை 

அன்பான சகோதர சகோதரிகளே,

நற்செய்தி அறிவிப்பு என்பது மகிழ்ச்சி, அது அனைவருக்குமானது இக்காலத்திற்கானது என்ற தலைப்புக்களில் நாம் கடந்த வாரங்களில் நாம் சிந்தித்தோம். இன்று அதன் முக்கிய மற்றும் நான்காவது பண்பைப் பற்றி அறிய இருக்கின்றோம். நற்செய்தி அறிவிப்பு என்பது தூய ஆவியில் நடைபெற வேண்டும் அவரில் நிலைபெற்று இருக்கவேண்டும். கடவுளோடு நாம் தொடர்பு கொள்வதற்கு மகிழ்ச்சி, சான்றுள்ள வாழ்வு, உலகளாவிய தன்மை, நாம் அறிவிக்கும் செய்தியின் தற்போதைய சூழல் மட்டும் இருந்தால் போதாது. ஏனெனில் தூய ஆவி இல்லாத நற்செய்தி அறிவிப்பு பேரார்வம் வீணானதாக, பொய்யானதாக இருக்கும். அது நம்முடையதாக மட்டுமே இருக்கும் பட்சத்தில் நல்ல மிகுதியான பலனை ஒரு போதும் தராது.  

Evangelii gaudium  சுற்றுமடலில் இயேசுவே முதன்மையான மற்றும் பெரிய நற்செய்தி அறிவிப்பாளர் என்று நினைவுகூர்ந்தேன். நற்செய்தி அறிவிப்பின் எந்த ஒரு வடிவமும் கடவுளுடையது. நம்மை அழைத்து அவரது பணியினை அவரோடு இணைந்து செய்ய, தூய ஆவியின் ஆற்றலால் நம்மைத் தூண்டினார் இறைவன். எனவே தூய ஆவியே நற்செய்தி அறிவிப்பில் முதன்மை பெற்று விளங்குகின்றார். முளைத்துத் தானாக வளரும் விதை உவமையில் இறையாட்சியை நல்ல நிலத்திற்கு ஒப்பிடுகின்றார் இயேசு. நல்ல நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. இச்செயல் தூய ஆவியினால் நிகழ்கின்றது. அவரே நற்செய்தி அறிவிப்பின் மையமாக விளங்குகின்றார். மறைப்பணியாளர்கள் செய்யும் பணிகளில் நல்ல பலனைக் காண உதவுகின்றார். இந்த விழிப்புணர்வு நமக்கு ஆறுதல் அளிக்கின்றது. சமமான தீர்க்கமான மற்றொன்றை தெளிவுபடுத்த இது நமக்கு உதவுகிறது. அதாவது, திருஅவை அதன் நற்செய்தி அறிவிப்பு பேராரவத்தில் தன்னை அறிவிக்கவில்லை, மாறாக ஓர் அருளை, கொடையை அளிக்கின்றது. இயேசு சமாரியப் பெண்ணிடம் கூறியது போல “கடவுளுடைய கொடையான தூய ஆவியை அறிவிக்கின்றது.

நற்செய்தி அறிவிப்பில் தூயஆவியே முதன்மையாக செயல்படுகின்றது என்பது நம்மை சோம்பலுக்கு இட்டுச் செல்லக்கூடாது. நம்பிக்கை என்பது நாம் நமது பணியிலிருந்து விலகுவதை நியாயப்படுத்தக்கூடாது. தானே வளரும் விதையின் உயிர் ஆற்றலானது விவசாயிகள் நிலத்தைப் புறக்கணிக்க அனுமதிக்காது. இயேசு, விண்ணகத்திற்கு ஏறும் முன் தன் சீடர்களுக்கு வழங்கிய அறிவுரையில் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்று கூறுகின்றார். இறைவன் நமக்கு இறையியல் கையேடுகளையோ அல்லது ஒரு மேய்ப்புப்பணிக்கான கையேட்டையோ விட்டுச் செல்லவில்லை, மாறாக நாம் செய்யும் பணியை ஊக்குவிக்கின்ற தூய ஆவியானவரை விட்டுச் சென்றிருக்கின்றார். ஆன்மாவைத் தூண்டும் துணிவுள்ள அறிவுக்கூர்மையுள்ள தூயஆவியார் இறைவனது செயலைப் பின்பற்ற நம்மை வழிநடத்துகின்றார். படைப்பாற்றல், எளிமை என்னும் இரண்டு பண்புகளைக் கொண்டு நமது பணிகளைச் செய்ய அழைப்புவிடுக்கின்றார்.

படைப்பாற்றல்

படைப்பாற்றல் என்பது இயேசுவை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இன்றே அறிவிப்பது. நாம் வாழ்கின்ற இக்காலகட்டம் கிறிஸ்தவ நம்பிக்கைகளை வாழ்வதில் கடினமான சூழலையும், சோர்வையும், ஏற்படுத்துகின்றது. இதனால் பல நேரங்களில் இடங்களில் நமது மேய்ப்புப்பணி பலனற்றதாகத் தோன்றி  பணியைச் செய்யும் எண்ணத்தைக் கைவிடத் தோன்றுகின்றது. ஒரு பாதுகாப்பான பகுதிக்குள் நம்மை மறைத்து அடைக்கலம் தேடவும்,நாம் செய்கின்ற காரியங்களையேத் திரும்ப திரும்ப செய்யவும், நம்பிக்கையுள்ளவர்கள் போல நம்மை வெளிப்படுத்தி கொள்வதற்கான சோதனைகளுக்கும் நம்மை ஆளாக்குகின்றது. நாம் தூயஆவியின் குரலுக்கு அடிக்கடி பதிலளிக்கும் போது அவை நமது தனிப்பட்ட கவலைகளுக்கு பதிலளிக்கும் செயல்களாக அமையும். படைப்பாற்றலுடன் கூடிய மேய்ப்புப்பணி தூய ஆவியின் துணையுடன் செய்யப்படுவது, மறைப்பணியாளர்களின் இதயத்தில் சுடர்விட்டு எரிவது, கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதற்கான சான்றாக விளங்குவது. ஒவ்வொரு முறையும் நாம் நமது அடிப்படை ஆதாரத்திற்குத் திரும்பி, நற்செய்தியின் உண்மையான புத்துணர்ச்சியை மீட்டெடுக்க முயற்சிக்கும் போது, ​​புதிய பாதைகள், படைப்பாற்றல் முறைகள், பிற வெளிப்பாடுகள், சொற்பொழிவுமிக்க அறிகுறிகள், இன்றைய உலகத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அர்த்தங்கள் நிறைந்த வார்த்தைகள் நம்மில் வெளிப்படுகின்றன.

எளிமை

தூயஆவியானவர் நம்மை நமது அடிப்படை ஆதாரத்திற்கு தொடக்கத்திற்கு முதல் நற்செய்தி அறிவிப்பிற்கு அழைத்துச் செல்கின்றார். தூய ஆவியின் நெருப்பு, தனது இறப்பு, உயிர்ப்பினால் தந்தையின் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்திய இயேசுவில் நாம் நம்பிக்கைக் கொள்ள வைக்கின்றது அவருடன் தொடர்பு கொள்ள வைக்கின்றது. இதுவே முதல் நற்செய்தி அறிவிப்பு. இது நற்செய்தி அறிவிப்பின் செயல்பாடுகளை முக்கியத்துவப்படுத்த வேண்டும். திருஅவையைப் புதுப்பிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் அதனை வெளிப்படுத்த வேண்டும். இயேசு கிறிஸ்து உங்களை அன்பு செய்கின்றார்.  அவர் உங்களை காப்பாற்ற தனது உயிரையேக் கொடுத்தார், உங்களுக்கு அறிவூட்ட, உங்களை பலப்படுத்த, உங்களை விடுவிக்க" இப்போது அவர் ஒவ்வொரு நாளும் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறார் என்று மீண்டும் மீண்டும் அறிவிக்க வேண்டும்.

சகோதர சகோதரிகளே, நாம்  தூயஆவியால் ஆட்கொள்ளப்பட நம்மையேக் கையளிப்போம். அதற்காக ஒவ்வொரு நாளும் அவரை அழைப்போம். அவர் நம்முடைய உடன்இருப்பாக, செயலாக இருக்கட்டும். நமது ஒவ்வொரு செயல், சந்திப்பு, கூட்டம், அறிவிப்பு ஆகியவற்றின் தொடக்கமாக இருக்கட்டும். அவர் திருஅவையை உயிர்ப்பித்து, புத்துயிர் பெறச் செய்கிறார்: அவருடன் நாம் இருக்கையில் எதற்கும் பயப்படத் தேவையில்லை, ஏனெனில் அவர், இணக்கமானவர், படைப்பாற்றலையும் எளிமையையும் எப்போதும் ஒன்றாக வைத்திருப்பவர். ஒற்றுமையைத் தூண்டுபவர், நம்மைப் பணியாற்ற அனுப்புபவர். பன்முகத்தன்மையில் ஒற்றுமைக்கான பாதைகளை திறப்பவர். அவரே நமது ஆற்றல். நமது நற்செய்தி அறிவிப்பின் உயிர்மூச்சு, நற்செய்தி அறிவிப்புப் பேரார்வத்தின் ஊற்று. தூய ஆவியே வாரும்!

இவ்வாறு திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கருத்துக்களை பேரருள்திரு பிலிப்போ சம்பனெல்லி அவர்கள் எடுத்துரைத்தார்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி அறிவிப்பு திருப்பீடத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டல் கருத்தரங்கில் பங்கேற்கும் பயிற்சியாளர்களை அன்புடன் வரவேற்றார். அன்புள்ள அருள்பணியாளர்களே,   இறைவனின் உதவி உங்களுக்குத் தொடர்ந்து துணைபுரியட்டும், இதன்வழியாக உங்களின்  கல்வி திருஅவைக்கான உங்கள் பணியினைப் புதுப்பிக்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர்களின் கல்லறைகளுக்கு வருகை தருவது அனைவருக்கும் ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தும் என்ற நல்ல நோக்கத்தில் டெர்னியில் உள்ள புனித பதுவை அந்தோணியார் பங்க்குத்தளத்தில் இருந்து வந்திருக்கும் மக்கள் அனைவரையும் வரவேற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மெக்ஸிகோவில் இருந்து வந்திருந்த Telethon அமைப்பின் உறுப்பினர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அன்புள்ள மெக்சிகன் மக்களே, அகாபுல்கோவில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், மெக்ஸிகோவில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்காகவும், பணியாற்றுங்கள் அவர்களுக்கு உதவுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்காகப் போராடுவோம், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் பாதுகாப்போம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இறுதியாக, முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், புதுமணத் தம்பதிகள் மற்றும் இளைஞர்களுக்கு தனது வாழ்த்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் அன்னை மரியின் அமல உற்பவ பெருவிழாவை நினைவு கூர்ந்து, அன்னை மரியா கடவுளின் அன்பை "நம்பினார் ஆம்" என்று பதிலளித்தார் என்று கூறினார். எல்லா இடங்களிலும் நற்செய்தியின் அன்பை முழுமையாக ஏற்பதிலும், கடவுளில் முழுமையாக நம்பிக்கைக் கொள்வதிலும், அன்பிற்கு சான்றாக இருப்பதிலும் அன்னை மரியாவைப் பின்பற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் போரின் துன்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்காக, குறிப்பாக உக்ரைன், இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்காக செபிக்க மறந்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் எப்போதும் தோல்விதான். யாரும் வெற்றி பெறுவதில்லை மாறாக, அனைவரையும் தோற்கடிக்கின்றது. ஆயுத உற்பத்தியாளர்கள் மட்டுமே இலாபம் சம்பாதிக்கின்றார்கள் என்றும் கூறினார்.

இவ்வாறு தனது கருத்துக்களை விண்ணப்பங்களாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 டிசம்பர் 2023, 08:44