தேடுதல்

இயேசுவின் ஒளியைத் தேடுபவர்களாவோம் – திருத்தந்தை

திறந்த மனம் கொண்ட பார்வையை வளர்த்து, செபத்திலும், பிற மக்களிலும் இயேசுவின் ஒளியைத் தேடுபவர்களாக நாம் மாற வேண்டும் என்பதை தவக்காலத்தின் தீர்மானமாகக் கொண்டு செயல்பட வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசுவின் ஒளியின் மீது நமது பார்வையை நிலை நிறுத்துவோம், ஒளிவீசும் அவரது முகத்தை எப்போதும் நமது கண்களுக்கு நேராக வைத்திருப்போம் என்றும், அன்பு, இரக்கம், நம்பிக்கை நிறைந்த அவரது ஒளி நிறைந்த முகத்தை எல்லா நேரங்களிலும் தேடுபவர்களாக வாழ்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் இரண்டாம் வார நற்செய்தி வாசகமான “இயேசு தோற்றம் மாறுதல்” குறித்த கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.

தனது பாடுகள் பற்றி சீடர்களுக்கு எடுத்துரைத்த இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரையும் தனிமையாக அழைத்துக்கொண்டு அவர்கள் முன் தோற்றம் மாறினார், அவரது ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளி வீசின, என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இந்த ஒளியின் வழியாக இறையரசு பற்றிய போதனை, பாவமன்னிப்பு, குணமளித்தல், அருளடையாளங்கள் என இயேசுவின் பணி வாழ்வில் சீடர்கள் கண்ட அனைத்தும் அந்த பெரிய ஒளியின் கதிர்கள் என்பதை அவர்களுக்கு இயேசு வெளிப்படுத்தினார் என்றும் கூறினார்.

இயேசுவின் ஒளியை, இயேசுவாகிய ஒளியைக் காணும் பார்வையை ஒருபோதும் மாற்றக்கூடாது, குறிப்பாக பாடுகளின் நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சோதனையின் தருணங்களில் ஒளியைக் காணும் தங்களது இந்தப் பார்வையை ஒருபோதும் இழக்கக்கூடாது என்பதை இதன் வழியாக இயேசு வலியுறுத்தினார் என்றும் கூறினார் திருத்தந்தை.

நிலத்தில் உழும் விவசாயிகள் தங்களது இலக்கில் கவனம் செலுத்தி ஒரே நேர்க்கோட்டில் நிலத்தை உழுவது போல, கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் நமது இலக்கில் கவனத்தை செலுத்தி, இயேசுவின் ஒளியைக் காண்பதை நமது வாழ்வின் இலக்காகக்கொண்டு செயல்பட வலியுறுத்தினார் திருத்தந்தை.

இயேசுவின் ஒளிக்கு நம் இதயங்களை, கண்களைத் திறப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அவர் அன்பானவர், நிலையான வாழ்வளிப்பவர், துன்பமான மற்றும் இக்கட்டான நேரங்களில் இரக்கமும், நம்பிக்கையும், எதிர்நோக்கும் கொண்ட அவரது முகத்தை நாம் தேடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

செபம், இறைவார்த்தைக்கு செவிசாய்த்தல், திருவருளடையாளங்கள் போன்றவை இயேசுவின் இத்தகைய ஒளியைக் காண நமக்கு உதவுகின்றன என்றும், திறந்த மனம் கொண்ட பார்வையை வளர்த்து, செபத்திலும், பிற மக்களிலும் இயேசுவின் ஒளியைத் தேடுபவர்களாக நாம் மாற வேண்டும் என்பதை தவக்காலத்தின் தீர்மானமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

எனது வாழ்க்கைப்பயணத்தில் என்னுடன் வரும் கிறிஸ்துவின் மீது எனது பார்வையை நிலைநிறுத்துகின்றேனா? அமைதியான நேரங்கள், செபம், திருநற்கருணை ஆராதனைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றேனா? என்னிலும் நான் சந்திக்கும் உடன் சகோதர சகோதரிகளிடத்திலும் இயேசுவினது ஒளியின் சிறு கதிர்களைக் காண முயல்கின்றேனா? இதற்காக இறைவனுக்கு நன்றி கூற நினைக்கின்றேனா? என்று சிந்தித்துப் பார்க்கவும் திருப்பயணிகளுக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் ஒளியால் நிறைந்து, சுடர்விடும் அன்னை மரியா, நம் பார்வையை இயேசுவின் மீது நிலைநிறுத்தவும், ஒருவரையொருவர் நம்பிக்கையுடனும் அன்புடனும் பார்க்கவும் நமக்கு உதவுவாராக என்று கூறி கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2024, 13:08

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >