தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - பொறாமை, வீண்பெருமை எனும் தீயொழுக்கங்கள்

கடந்த பிப்ரவரி 24 சனிக்கிழமை முதல் லேசான காய்ச்சலால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இன்றைய புதன் மறைக்கல்வி உரையினை பேரருள்திரு Filippo Ciampanelli திருத்தந்தையின் சார்பாக வாசித்தளித்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிப்ரவரி மாதத்தின் இறுதிவாரமும் தவக்காலத்தின் இரண்டாம் வாரமுமாகிய 28 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கத்தின் 9ஆம் பகுதியாக பொறாமை மற்றும் வீண்பெருமை குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தவக்கால ஆண்டு தியானத்தை முன்னிட்டு கடந்த வார புதன் பொது மறைக்கல்வி உரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று பிப்ரவரி 28 புதன்கிழமை பொதுமறைக்கல்வி உரையானது வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தலைப்பின் கீழ் தொடர் மறைக்கல்வி உரையினை ஆற்றி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்று அதன் தொடர்ச்சியாக பொறாமை மற்றும் வீண்பெருமை  என்பது பற்றிய தனது கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். கடந்த பிப்ரவரி 24 சனிக்கிழமை முதல் லேசான காய்ச்சலால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இன்றைய புதன் மறைக்கல்வி உரையினை பேரருள்திரு Filippo Ciampanelli திருத்தந்தையின் சார்பாக வாசித்தளித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான திருப்பயணிகள் திருத்தந்தையின் வருகைக்காக வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் காத்திருக்க, அவர்களைக் கரமசைத்து மகிழ்வுடன் வரவேற்றார் திருத்தந்தை. புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்ததும் சிலுவை அடையாளத்துடன் தனது கூட்டத்தை தொடங்கினார். அதன்பின் திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் உள்ள தூய ஆவியின் கனியும் ஊனியல்பின் செயல்களும் என்ற பகுதியின்கீழ் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், ஆங்கிலம் அரபு, போர்த்துக்கீசியம், இஸ்பானியம், லித்துவானியம், பிரெஞ்சு, போன்ற பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.

கலாத்தியர் 5: 24-26

கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம். வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர்மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக!

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை பேரருள்திரு Filippo Ciampanelli திருத்தந்தையின் சார்பாக வாசித்தளித்தார். திருத்தந்தையின் மறைக்கல்விஉரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் பற்றிய நமது தொடர் மறைக்கல்வி உரையில் இன்று நாம் இரண்டு பெரிய தீயொழுக்கங்களைப் பற்றிக் காண இருக்கின்றோம் ஒன்று பொறாமை மற்றொன்று வீண்பெருமை. முதலில் பொறாமை. திருவிவிலியத்தின் தொடக்கத்தில் நாம் காணும் மிகப்பழமையான தீயொழுக்கமாக பொறாமை உள்ளது. தங்களது காணிக்கைகளைக் கடவுளுக்கு அர்ப்பணித்தபோது ஆபேலின் காணிக்கையைக் கடவுள் ஏற்றுக்கொண்டார் என்று அறிந்து காயின் தன் சகோதரன் ஆபேல் மேல் கொண்ட வெறுப்பு பொறாமையின் வடிவம். காயீன், ஆதாம்-ஏவாளின் தலைமகன். தனது தந்தையிடமிருந்து ஏராளமான செல்வத்தை தனக்கெனப் பெற்றுக்கொண்டிருந்தாலும், தனது சகோதரன் ஆபேல் மிகச்சிறிய பகுதியைப் பெற்றிருந்தாலும் கூட அதனைக் குறித்து மிகவும் வெறுப்பு அடைந்தான். பொறாமை குணம் கொண்டவர்களின் முகம் எப்போதும் சோகத்துடனேயேக் காணப்படும். அவர்களது பார்வை எப்போதும் தாழ்ந்ததாக கீழ்நோக்கியே இருக்கும். எப்போதும் நிலத்தை பார்த்துக்கொண்டே இருப்பவர்கள் போன்று அவர்கள் காணப்பட்டாலும், உண்மையில் அவர்களது கண்களுக்கு எதுவும் தெரிவதில்லை. ஏனெனில் அவர்களது எண்ணம் முழுவதும் தீமையினால் நிறைந்திருக்கும். பொறாமை குணத்தை நாம் கட்டுப்படுத்தாவிட்டால், அது மற்றவர்கள் மீதான வெறுப்பை உண்டுபண்ணுகின்றது. தன் சகோதரன் ஆபேலின் மகிழ்வைப் பொறுத்துக்கொள்ள முடியாத காயீனின் கைகளால் ஆபேல் கொல்லப்பட்டது போன்ற வெறுப்பை நம்மில் உருவாக்குகின்றது. 

பொறாமை என்பது கிறிஸ்தவ சூழலில் மட்டுமன்றும், ஒவ்வொரு கலாச்சாரத்தின் தத்துவவாதிகள் மற்றும் அறிஞர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையில் ஓர் உறவு உள்ளது என்பது தெளிவாகின்றது. மற்றவர்கள் தீமையை அனுபவிக்கவேண்டும் என்று விரும்பும் நபர் உண்மையில் மறைமுகமாக அவரைப் போல மாறவே விரும்புகின்றார். நாம் என்னவாக இருக்க விரும்புகிறோமோ உண்மையில் நாம் அதுவாக இருக்கவில்லை என்பதற்கான சான்று அது. அவருடைய அதிர்ஷ்டம் நமக்கு ஓர் அநீதியாகத் தெரிகிறது. அவருடைய வெற்றிகளுக்கும், நல்ல அதிர்ஷ்டத்திற்கும் அவரை விட நாமே மிகவும் தகுதியானவர்கள் என்றே கருதுகின்றோம்.

கடவுளின் கணக்கீடுகளை விட வேறுபட்ட நமது கணக்கீடுகளை அவர் ஒருபோதும் ஏற்பதில்லை. உதாரணமாக, ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் திராட்சைத் தோட்டத்திற்குச் செல்ல உரிமையாளரால் அழைக்கப்பட்ட வேலையாட்களைப் பற்றிய இயேசுவின் உவமையில், முதலில் வந்தவர்கள் கடைசியாக வந்தவர்களை விட அதிக ஊதியத்திற்கு சம்பளத்திற்கு தகுதியுடையவர்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் தோட்டத்தின் முதலாளி அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் கொடுத்து, எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்று கூறுகின்றார். நம் சுயநலக் கொள்கையைக் கடவுள் மீது திணிக்க விரும்புகிறோம், ஆனால் கடவுளின் கொள்கை அன்பு மட்டுமே. அவர் நமக்குக் கொடுத்த அனைத்து கொடைகளும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவைகள். அதனால்தான் தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில், உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். (உரோமையர் 12:10) என்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். இதுவே பொறாமை எனும் தீயொழுக்கத்திலிருந்து விடுபடுவதற்கானத் தீர்வு.

இரண்டாவது தீயொழுக்கமானது வீண்பெருமை. இது பொறாமை என்னும் அலகையுடன் இணைந்து செல்கின்றது. இந்த இரண்டு தீயொழுக்கங்களையும் உடைய மனிதர் இந்த உலகின் மிக முக்கியமான நபராக இருக்க விரும்புகின்றார். அனைவரையும் சுரண்ட விரும்புபவராக, இவ்வுலகின் ஒவ்வொரு பெருமை, பாராட்டு மற்றும் அன்பிற்கான பொருளை எளிதில் சுரண்டுபவராக இருக்க விரும்புகின்றார். வீண்பெருமை என்பது அடிப்படை இன்றி உருவாக்கப்பட்ட மற்றும் காற்றடைக்கப்பட்ட சுயமரியாதை போன்றது. நான் என்னும் தற்பெருமையைக் கொண்டது. உலகில் அவரைத்தவிர பிற மனிதர்களும் இருக்கின்றார்கள் என்ற இரக்க உணர்வு அவரிடம் இருப்பதில்லை. மற்றவர்களுடனான உறவு எப்போதும் ஒரு கருவியாக, அடக்குமுறையாக மட்டுமே அவரில் வெளிப்படுத்தப்படுகின்றது. அவரது வெற்றிகள், அவர் பெற்றுக்கொண்டவைகள் எல்லாமே அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றார். அவரது பண்புகளும் குணங்களும் பிறரால் கவனிக்கப்படவில்லை எனில் மிகவும் கோபம் கொண்டவராகக் காணப்படுகின்றார். மற்றவர்கள் அனைவரும் அநியாயம் செய்பவர்கள், புரிந்து கொள்ள இயலாதவர்கள், நமக்கு சமமானவர்கள் அல்ல என்ற எண்ணம் கொண்டவர்களாக வீண்பெருமை கொண்டவர்கள் காணப்படுகின்றனர்.      

எவாக்ரியோ போன்திகோ என்னும் கிரேக்க எழுத்தாளரும் கிறிஸ்தவ துறவியுமானவர் தனது குறிப்புக்களில் வீண்பெருமையினால் பாதிக்கப்பட்ட துறவிகளின் வாழ்வைப் பற்றிக் கூறுகின்றார். துறவிகள் தங்களது ஆன்மிக வாழ்க்கையில் பெற்ற முதல் வெற்றிக்குப் பின்னரே இத்தகைய வீண்பெருமையினால் தாக்கப்படுகின்றனர். தாங்கள் ஒரு நிலையை அடைந்து விட்டதாகவும், உலகின் பெருமையைப் பெற முன்னேறிச் செல்வதாகவும் எண்ணுகின்றனர். ஆன்மிக வாழ்வின் துவக்கத்தில் தான் அவர்கள் இருக்கின்றார்கள் என்பதையும், அவர்களை வீழ்த்தும் ஒரு சோதனையில் அவர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் வீண்பெருமை கொண்டவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை.

வீண்பெருமை என்னும் தீயொழுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த, ஆன்மிகத் தலைவர்கள் அதிகமான பரிந்துரைகளைக் கூறவில்லை ஏனெனில், இத்தகைய தீமையின் மாயைக்கான தீர்வு என்பது அவர்களிடமே இருக்கின்றது. உலகில் புகழை அறுவடை செய்ய விரும்பும் வீண்பெருமை கொண்டவர், அப்புகழ் அவருக்கு எதிராகவேத் திரும்பும் என்பதை மறந்து விடுகின்றார். இத்தகைய புகழ் என்னும் மாயையான உருவத்தால் எத்தனைபேர் பாவத்தில் விழுந்து வெட்கக்கேடு அடைந்து இருக்கின்றனர்.

வீண்பெருமையை முறியடிப்பதற்கான மிக அழகான அறிவுறுத்தலை திருத்தூதர் தூய பவுலின் சான்றுகளிலிருந்து நாம் காணலாம். திருத்தூதர் பவுல் எப்போதும் ஒரு இறுமாப்பு என்னும் பெருங்குறைபாட்டை சமாளிக்க வேண்டியிருந்தது, அதை அவரால் ஒருபோதும் சமாளிக்க முடியவில்லை. எனவே அந்த வேதனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மூன்று முறை அவர் இறைவனிடம் வேண்டினார். இறுதியில் இயேசு அவருக்கு “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்று பதிலளித்தார். அந்த நாள் முதல் தூய பவுல் தனது சோதனையிலிருந்து விடுதலை பெற்றார். ஆதலால், நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும் என்று கூறுகின்றார். திருத்தூதர் பவுலின் இத்தகைய வரிகள் நமதாக இருக்கவேண்டும்.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரைக்கருத்துக்களை   பேரருள்திரு பிலிப்போ சம்பனெல்லி அவர்கள் எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை திருத்தந்தை  வாழ்த்தினார்.

மார்ச் 1 வெள்ளிக்கிழமை அன்று நினைவுகூரும் கண்ணிவெடிகளைத் தடைசெய்வதற்கான மாநாடு நடைமுறைக்கு வந்ததன் 25ஆம் ஆண்டினை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை. போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் அப்பாவி பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கான மாநாடு நடைமுறைக்கு வந்ததன் 25வது ஆண்டு நிறைவை மார்ச் 1ம் தேதி சிறப்பிக்க இருக்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போரினால் ஏற்பட்ட கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களை இன்றைய நாள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றது என்றும் இத்தகைய கொடுமையான சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்கள், அவர்களுக்கான பராமரிப்புப் பணிகளைச் செய்பவர்கள் என அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். அவர்களது இப்பணியானது இவ்வுலகிற்கான அமைதியின் பணியாளர்களாகவும், நமது உடன் சகோதர சகோதரிகளை கவனித்துக் கொள்பவர்களாகவும் மாறுவதவதற்கான ஓர் உறுதியான அழைப்பு என்றும், குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எமிலியா ரோமக்னா, தூய மரினோ-மான்டெஃபெல்த்ரோ மறைமாவட்டங்களில் இருந்து வரும் திருப்பயணிகளையும் அவர்களுடன் வந்திருக்கும் ஆயர்களையும் வாழ்த்தினார். இறுதியாக,  நோயாளிகள், முதியவர்கள், புதுமணத் தம்பதிகள் மற்றும் இளைஞர்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், உரோமில் உள்ள “Falcone e Borsellino” “Fucecchio வில் உள்ள Giovanni Pascoli” பள்ளி மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தி தவக்காலமானது நமக்குள் நாம் திரும்பச் சென்று  தூய ஆவியின் ஆற்றலில் நம்மைப் புதுப்பிக்க உதவட்டும் என்றும் கூறினார்.

போரினால் பாதிக்கப்படும் மக்களை மறந்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் வாழும் மக்களுக்காக செபிக்கக் கேட்டுக்கொண்டார்.  மேற்கு ஆப்ரிக்காவின் புர்கினா பாசோவில் வழிபாட்டுத் தலங்கள் மீதான அண்மைய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிப்பதாகவும், ஆயுதமேந்திய கும்பல்களால் ஏற்படும் விளைவுகள் மற்றும் கடத்தல்களால் பாதிக்கப்படும் ஹெய்டி மக்களுக்காக செபிப்பதாவும் கூறினார்.

இவ்வாறு தனது விண்ணப்பங்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2024, 08:44

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >