தேடுதல்

சந்தைகளை அல்ல இல்லங்களை உருவாக்குபவர்களாக....

இறைவனுக்கு முன் நம்மை இருவேறு நிலைகளில் நிலைநிறுத்தும், இல்லம் - சந்தை என்னும் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டில் கவனம் செலுத்துவோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தவக்காலப் பயணத்தில் நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் சந்தைகளை அல்ல மாறாக இல்லங்களை உருவாக்க செபிப்போம் என்றும், கஞ்சத்தனம் மற்றும் அவநம்பிக்கைக் கொண்ட சந்தைகளைப் போலல்லாமல் நம்பிக்கையுள்ளவர்களாக, தொய்வின்றி இறைத்தந்தையின் கதவை நாம் தட்டவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 3 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் மூன்றாம் வார நற்செய்தி வாசகமான இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்துதல் பகுதி பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

வணிகர்களை ஆலயத்திலிருந்து விரட்டி அடித்து, என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் என்று கூறிய கடுமையான இயேசுவை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கக் கேட்டோம் என்றும், இறைவனுக்கு முன் நம்மை இருவேறு நிலைகளில் நிலைநிறுத்தும், இல்லம் - சந்தை என்னும் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டில் கவனம் செலுத்துவோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

சந்தை – இல்லம்

சந்தையாகக் கருதப்பட்ட கோவிலில், கடவுளுடன் இருக்க, ஓர் ஆட்டை விலைக்கு வாங்கி அதனை பலிசெலுத்துகின்றனர் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், விலைக்கு வாங்குதல், பணம் செலுத்துதல், பலிசெலுத்துதல், அவரவர் இல்லம் செல்லுதல் என்ற முறையில் ஆலயம் இருந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆலயம் என்பது ஓர் இல்லமாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அதற்கு நேர்மாறாகவே அங்கு நடைபெற்ற செயல்கள் இருந்தன, ஆலயம் என்பது கடவுளை சந்திக்கச்செல்லும் இடம், அவருடன் ஒன்றித்து இருப்பதற்கான இடம், நமது மகிழ்ச்சி மற்றும் துன்பங்களை அவருடன் பகிர்ந்து கொள்வதற்கான இடம் என்றும் கூறினார் திருத்தந்தை.

சந்தையில் பொருள்களின் விலையோடு செய்யப்படும் வியாபார உக்திகள், பேரம்பேசுதல் போன்றவை இருக்கும், ஆனால், இல்லத்தில் அதனை நாம் காணமுடியாது என்றும், சந்தையில் தனது சொந்த விருப்பங்களை மக்கள் நாடுவர், இல்லத்தில் நமது விருப்பங்கள் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன என்றும் வரையறுத்தார் திருத்தந்தை.

இயேசு ஏற்க மறுப்பவை

இயேசு கடவுளின் ஆலயம் இல்லமாக மாறுவதை விடுத்து சந்தையாக மாறுவதை ஏற்கவில்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இறைவனுடனான உறவு நெருக்கமாக, நம்பிக்கையாக இருப்பதற்குப் பதிலாக வியாபாரமாக இடைவெளியுள்ளதாக மாறுகின்றது, குடும்பமாக இணைந்து உண்ண உதவும் மேசைகள், விலைபொருள்களை விற்பனை செய்பவைகளாக மாறுகின்றன, சகோதர அரவணைப்புக்கள் விலைகளாகவும், பாசமான தொடுதல்கள் நாணயங்களாகவும் மாறுகின்றன, இதனை இயேசு ஏற்பதில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுளுக்கும் மனிதனுக்கும், சகோதரர்கள் ஒருவர் மற்றவருக்கும் இடையில் இந்த மாறுதல்கள் ஒரு தடையை உருவாக்குவதால் இயேசு இதனை ஏற்கவில்லை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், ஒன்றிப்பை, இரக்கத்தை, மன்னிப்பை கடவுளின் நெருக்கத்தை நம்மில் கொண்டு வர கிறிஸ்து நமக்காக வந்தார் என்றும் கூறினார்.

மனித உடன்பிறந்த உணர்வைப் பகிர உதவும் செபம்

செபிப்பதன் வழியாக மனித உடன்பிறந்த உணர்வைப் பரப்புங்கள் அது அதிகமாகத் தேவை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயரமான, தனிமைப்படுத்தப்பட்ட, கொடுமையான அமைதியை சந்திக்கும் சூழலில் உள்ளவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்போம் என்றும் கூறினார்.

எனது செபம் எப்படி உள்ளது? விலை கொடுத்து பெறவேண்டிய ஒன்றா அல்லது கடிகாரத்தை பார்க்காத நம்பிக்கையுடன் கொடுக்கப்பட்ட தருணமா என்று சிந்தித்துப் பார்ப்போம் என்றும், மற்றவர்களுடனான எனது உறவு எப்படி இருக்கின்றது? பிரதிபலன் எதிர்பார்க்காமல் எப்படி வழங்குவது என்று நான் அறிந்திருக்கின்றேனா? அமைதியின் சுவர்களையும் இடைவெளியின் வெற்றிடங்களையும் உடைப்பது எவ்வாறு என்று நான் அறிந்திருக்கின்றேனா? என்பன போன்ற கேள்விகளை நமக்குள் நாமேக் கேட்டுக்கொள்ள வலியுறுத்தினார் திருத்தந்தை.

நம்மிலும் நம்மைச்சுற்றிலும் இல்லங்களை அமைக்க அன்னை மரியாள் உதவுவாராக என்று கூறி கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2024, 13:53

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >