தேடுதல்

தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, உலகை மீட்க வந்த இயேசு

இயேசுவிற்கு முன் இரகசியங்கள் என்று எதுவுமில்லை ஏனெனில் இயேசு நம் ஒவ்வொருவரின் இதயத்தையும் அறிபவர் என்றும் கூறினார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசு உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல மாறாக அதை மீட்கவே கடவுளால் உலகிற்கு அனுப்பப்பட்டவர் என்றும், இயேசுவிற்கு முன் இரகசியங்கள் என்பது இல்லை ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவரின் இதயத்தில் இருப்பவற்றையும் அறிபவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை குளிர்காற்றும் மென்மையான மழைச்சாரலும் கொண்ட நண்பகல் வேளையில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தவக்காலத்தின் நான்காம் வார நற்செய்தி வாசகமான இயேசுவும் நிக்கதேமும் என்ற பகுதி குறித்தக் கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நிக்கதேம் இயேசு செய்த அரும்அடையாளங்களைக் கண்டு இயேசுவை இரவில் சந்திக்க வந்தவர் என்றும், இயேசு, கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதைக் கண்டறிந்தவர் நிக்கதேம் என்றும் கூறினார்.

நற்செய்தியில் இயேசு பல இடங்களில், தான் சந்திக்கும் மக்களின் நோக்கங்கள் என்ன என்பதை வெளிப்படுத்துபவர், பரிசேயரின் தவறானப் போக்கினை வெளிப்படுத்துபவர், சமாரியப்பெண்ணின் வாழ்க்கையை சிந்தித்துப் பார்க்க வைப்பவர் போன்று அடையாளப்படுத்துகின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இயேசுவிற்கு முன் இரகசியங்கள் என்று எதுவுமில்லை ஏனெனில் இயேசு நம் ஒவ்வொருவரின் இதயத்தையும் அறிபவர் என்றும் கூறினார்.

யாரும் மிகச் சரியானவர்கள் அல்ல நாம் அனைவரும் பாவிகள், தவறு செய்யக்கூடியவர்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடவுள் நம்மைத் தீர்ப்பிடுவதற்காக நம் பலவீனங்களைப் பற்றி அறிய முயன்றால், நாம் யாரும் அவரால் மீட்கப்பட முடியாது என்றும் கூறினார்.

நம் பாவங்களைச் சுட்டிக் காட்ட, அவர் நம்மை நோக்கித் தம் விரல்களை நீட்டுவதில்லை, மாறாக, பாவங்களிலிருந்து விடுதலையளிக்கவும், நம்மை மீட்கவும், நமது வாழ்வை அரவணைக்கவும் செய்கின்றார் என்றும், நம்மைத் தீர்ப்பிற்கோ விசாரணைக்கோ உட்படுத்துவதில் அல்ல மாறாக ஒருவரும் இழக்கப்படாமல் அனைவரும் அன்பு செய்யப்படவேண்டும் என்றே இயேசு விரும்புகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுளின் பார்வை என்பது நம்மை இக்கட்டுகளுக்கு உள்ளாக்குவதல்ல மாறாக நட்புறவினை வெளிப்படுத்தும் மென்மையான ஒளிவிளக்கு என்றும், அவ்விளக்கின் ஒளியானது, நமது நன்மைகளைக் காணவும், தீமையை உணரவும், மனமாற்றமடையவும், அவரது அருளால் பாதுகாப்படையவும் குணமடையவும்  உதவுகின்றது என்றும் கூறினார்.

இயேசு நம்மைத் தீர்ப்பிட வரவில்லை மாறாக உலகை மீட்பதற்காகவே இயேசு வந்தார் என்று மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பிறரைப் பற்றித் தவறாகப் பேசும்போது, புறணிகளை எடுத்துரைக்கும்போது எல்லாம் நாம் பிறரைத் தீர்ப்பிடுகின்றோம் என்றும், இயேசு இரக்கத்தோடு பிறரைப் பார்ப்பது போல நாமும் இரக்கத்தோடுப் பிறரைப் பார்த்து வாழ அருள்வேண்டுவோம் என்றும் கூறினார்.

இறுதியாக நாம் ஒருவருக்கொருவர் நன்மையை மட்டும் விரும்புவதற்கு அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்று கூறி கூடியிருந்த அனைவருக்கும் மூவேளை செபத்திற்குப் பின் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை  வழங்கினார் திருத்தந்தை.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2024, 13:16

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >