தேடுதல்

இத்தாலிய மாணவர்களுடன் திருத்தந்தை இத்தாலிய மாணவர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

அமைதியின் கலைஞர்களாகச் செயல்படும்படி அழைப்பு

புன்னகை என்பதையே மறந்துவிட்ட உக்ரைன் குழந்தைகளையும், துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியும், பசியாலும் வாடும் காசா குழந்தைகளையும் மறந்துவிடாதீர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இத்தாலியிலுள்ள அமைதிக்கான பள்ளிகளின் தேசிய கூட்டமைவின் ஏறக்குறைய 6000 மாணவர்களை வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் கலைஞர்களாகச் செயல்படும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நல்லதொரு வருங்காலத்திற்காக அர்ப்பணத்துடன் செயல்பட்டுவரும் மாணவர்கள், உலகு குறித்த புதுமையான எண்ணங்களைக் கொண்டுள்ளார்கள் என பாராட்டுதல்களை வெளியிட்ட திருத்தந்தை, போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் மற்றும் காசா பகுதி குழந்தைகளை நினைவில் கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

புன்னகை என்பதையே மறந்துவிட்ட உக்ரைன் குழந்தைகளையும், துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியும், பசியால் துன்பங்களை அனுபவித்தும் வரும் காசா குழந்தைகளையும் மறந்துவிடாமல் செயல்படவேண்டும் எனவும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

அமைதிப் பள்ளிகளின் இத்தாலிய தேசிய கூட்டமைவு, பள்ளிகளின் பாடத்திட்டத்தில் அமைதி, மனித உரிமைகள், நீதி, குடிமக்களுக்குரிய கடமைகள், பொறுப்புணர்வு ஆகியவைகளை இணைத்து மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறது.

வருங்காலம் குறித்த கருத்தரங்கு ஐ.நா.வால் நியூயார்க் நகரில் செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ளதைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த கருத்தரங்கின் தீர்மானங்களில் சிறார்களின் பங்களிப்பு இல்லாமல் அது முழுமையடையாது என்பதையும் வலியுறுத்தினார்.

இன்றைய சவால்கள் உலகளாவிய அளவில் இருப்பதால், கூட்டுக்கனவுடன், சுற்றுச்சூழல், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

தூக்கத்தையல்ல, மாறாக விழிப்புடன் இருப்பதை எதிர்பார்க்கும் நம் கனவுகள், செபத்தின் வழியாக நனவாக மாறுகின்றன என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2024, 15:27