திருத்தந்தையுடன் மால்ட்டா அரசுத்தலைவர் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஜனவரி 24, வெள்ளிக்கிழமையன்று, மால்ட்டா நாட்டின் அரசுத்தலைவர் Myriam Spiteri Debono அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இத்தாலிய நேரம் காலை 9 மணிக்கு திருத்தந்தையை தனியாகச் சந்தித்து ஏறக்குறைய 30 நிமிடங்கள் உரையாடி பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொண்ட பின்னர் புகைப்படங்களும் எடுத்துக்கொண்ட மால்ட்டா அரசுத்தலைவர், அதன்பின்னர் வெளிநாடுகளுடன் உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடல் நடத்தினார்.
திருப்பீட அதிகாரிகளுக்கும் மால்ட்டா அரசுத்தலைவர் Myriam Spiteri அவர்களுக்கும் இடையே திருப்பீடச் செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுகமான உறவு குறித்தும், பொதுவான விடயங்களில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதில் அர்ப்பணம் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இப்பேச்சுவார்த்தைகளின்போது, பல பன்னாட்டு விவகாரங்கள் குறித்து, குறிப்பாக மத்தியதரைக்கடல் பகுதியின் நிலைகள், இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான மோதல், உக்ரைன் நெருக்கடி, குடியேற்றதாரர் குறித்த சவால்கள் போன்றவை விவாதிக்கப்பட்டன.
இதே வெள்ளிக்கிழமையன்று காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, போர்த்துக்கல் நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் Paulo Rangel அவர்களும் சந்தித்து உரையாடினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
