தேடுதல்

பெரு நாட்டு இளைஞர்களுடனான சந்திப்பின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ. பெரு நாட்டு இளைஞர்களுடனான சந்திப்பின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ.   (@Vatican Media)

திருஅவையின் ஒரு பகுதியாக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்

நம்மை முழுமையாக அன்பு செய்து, தன்னையே கொடுத்த கிறிஸ்து, திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு நபரிலும் இருக்கிறார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் சிறியவர்களாக இருந்தாலும் நாம் தனியாக இல்லை, கடவுள் நம்மை ஒரு பெரிய குடும்பமான திருஅவையின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும், கிறிஸ்து என்னும் திராட்சைக் கொடியில் கடவுளின் அருளால் நாம் இணைக்கப்பட்டிருந்தால் வளர்ந்து கனி கொடுக்க நம்மால் முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 28, திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் பெரு நாட்டு இளைஞர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இளைஞர்களுக்கான யூபிலி ஆண்டினை முன்னிட்டு உரோமிற்குத் திருப்பயணிகளாக வந்திருக்கும் இளைஞர்கள் அனைவரையும் வாழ்த்தினார்.

இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்படும் கடுகுவிதை, புளிப்பு மாவு ஆகிய இரண்டும் வாழ்க்கையானது மாற்றமடையக் கூடியது, வளரக் கூடியது, எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்காக பணியாற்றக்கூடியது என்பதை வலியுறுத்துகின்றன என்று கூறினார் திருத்தந்தை.

இளைஞர்களுக்கான இந்த யூபிலி நாட்களில், இனம், மொழி, நாடு என்ற வேறுபாடு இல்லாமல், முழு பூமியையும் தழுவி, உலகளாவிய திருஅவை, மற்றும்  இறைமக்களின் ஒரு பகுதியாக உணரும் அழகான அனுபவத்தை அனைவரும் பெறலாம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், கடுகு மரம் போல வளர்ந்து பரவி, புளிப்புமாவாக அனைத்து மாவையும் புளிக்கவைக்க நம்மால் இயலும் என்றும் கூறினார்.

இளைஞர் யூபிலி நாளின் முக்கியமான தருணங்களை வெறும் புகைப்படங்களாக மட்டும் பெருவுக்குத் திரும்பும்போது கொண்டு செல்லக்கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நற்செய்தியின் மகிழ்ச்சியாலும் பலத்தாலும், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியாலும் நாட்டில் உள்ள மக்களை நிரப்ப வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

சந்திக்கும் அனைத்து மக்களும் கிறிஸ்துவின் முகத்தை நம்மில் காண வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நம்மை முழுமையாக அன்பு செய்து, தன்னையே கொடுத்த கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு நபரிலும் இருக்கிறார், எனவே, அன்றாட வாழ்வில், சிறிய மற்றும் மறைக்கப்பட்ட விஷயங்களில் சுதந்திரமாக அன்பு செலுத்துங்கள், பணியாற்றுங்கள் என்றும் கூறினார்.

தந்தைக் கடவுளிடமிருந்து அனைத்தையும் இலவசமாகப் பெற்றிருக்கும் நாம் அதனை இலவசமாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தேவையானவற்றைச் சுமந்து செல்பவர்களாக, எங்கு சென்றாலும் மறைப்பணியாளர்களாக இருக்கக் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜூலை 2025, 12:54