இளையோர்க் கல்வி ஆற்றுவோர்க்கு முன்மாதிரிகை அருளாளர் Licarione May
மெரினா ராஜ் – வத்திக்கான்
புதிய அருளாளர் Licarione May அவர்கள், கடினமான சூழ்நிலையிலும், கல்வி மற்றும் மேய்ப்புப்பணியினைத் துணிவுடன் ஆற்றியவர் என்றும், மாரிஸ்ட் சபை அருள்சகோதரரான அவரது மறைசாட்சிய வாழ்வானது இளைஞர்களுக்கான கல்விப்பணியில் செயல்படுபவர்களுக்கான ஒரு தூண்டுதலாக இருக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை 13, ஞாயிறு காஸ்தல் கந்தோல்போ லிபர்தா வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், 1909-ஆம் ஆண்டு கிறிஸ்தவ நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவரும், ஜூலை 12 சனிக்கிழமை பர்சலோனாவில் அருளாளராக உயர்த்தப்பட்டவருமான அருளாளர் Licarione May அவர்கள் போல வாழ வலியுறுத்தினார்.
போலந்து திருவழிபாட்டு அகாடமியின் கோடைகாலப் பயிற்சியின் பங்கேற்பாளர்கள், போலந்து நாட்டின் Częstochowa திருத்தலத்தின் வருடாந்திரத் திருப்பயணிகள், பெர்கமோ மறைமாவட்ட திருப்பயணிகள், பெருவின் சிக்லாயோ மறைமாவட்டத்தில் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் என அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.
கோடை மாதங்களில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக கோடைக்காலப் பயிற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளும் கல்வியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், உலகில் உள்ள அனைத்து இளைஞர்களையும் ஒன்றிணைத்து “மனிதர்களாக மாறுவோம்” என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்படும் கிஃப்போனி திரைப்பட விழா பற்றியும் எடுத்துரைத்து பாராட்டினார்.
அமைதிக்காக செபிக்க மறக்கவேண்டாம், வன்முறை மற்றும் போர் காரணமாக, துன்பத்திலும் தேவையிலும் இருக்கும் அனைவருக்காகவும் செபிக்க மறக்கக்கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்களைக்கூறி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
