நம்பிக்கையின் சான்றுகள் தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும் முதியோர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இளைய தலைமுறையினரின் பாதையை ஒளிரச் செய்யக்கூடிய நம்பிக்கையின் சான்றுகளாக தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும் முதியவர்களை நாம் பார்க்கிறோம் என்றும், அவர்களைத் தனியாக விட்டுவிடாமல், அவர்களுடன் அன்பு மற்றும் செபத்தின் வழியாக ஓர் கூட்டணியை உருவாக்குவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை, 27 ஞாயிறு அன்று சிறப்பிக்கப்பட்ட ஐந்தாவது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கான ‘நம்பிக்கை தளராதோர் பேறுபெற்றோர்’ (சீரா 14:2) என்னும் தலைப்பினை நினைவுகூர்ந்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், மூவேளை செப உரையைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களின்போது உலகில் உள்ள எல்லா தாத்தா பாட்டி மற்றும் முதியோர்களை வாழ்த்தினார்.
மோதல்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்படும் உலக மக்களுக்கு தனது இதயப்பூர்வமான உடனிருப்பை தெரிவித்த திருத்தந்தை அவர்கள், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான எல்லை மோதல்களில் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.
அமைதியின் இளவரசராம் இறைவன் உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தைத் தேட அனைவரையும் ஊக்குவிக்கட்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தெற்கு சிரியாவில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிப்பதாகவும் தெரிவித்தார்.
காசாவில் நிலவிவரும் மிகவும் கடுமையான மனிதாபிமான சூழ்நிலையை மிகுந்த அக்கறையுடன் அறிந்து வருவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பசியால் வாடும் மக்கள் தொடர்ந்து வன்முறை மற்றும் மரணத்திற்கு ஆளாகின்றனர் என்றும், போர் நிறுத்தம், பிணையக்கைதிகள் விடுதலை, மனிதாபிமான சட்டத்திற்கு முழு மரியாதை ஆகியவற்றிற்கான தனது இதயப்பூர்வமான வேண்டுகோளையும் புதுப்பித்தார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் வழங்கிய உள்ளார்ந்த மாண்பு ஒன்று உண்டு, இதனை அனைத்து மோதல்களில் ஈடுபடும் தரப்பினர் அங்கீகரிக்க வேண்டும், அதற்கு முரணான செய்யும் எந்தவொரு செயலையும் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், அனைத்து மக்களுக்கான அமைதியான எதிர்காலத்திற்கான உரையாடலை மேற்கொள்ளவும், அதை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய எந்த ஒன்றையும் நிராகரிக்கவும் வலியுறுத்தினார்.
யூபிலி ஆண்டிற்காக உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகள் மற்றும் இறைமக்களுக்கு உதவும் வகையில், வத்திக்கான் வளாகத்தில் உள்ள பெர்னினியின் தூண்களின் கீழ் ஒரு சிறிய நிலையத்தை L'Osservatore Romano பத்திரிக்கை உடன் இணைந்து திறந்து வைத்த வத்திக்கான் வானொலி/வத்திக்கான் செய்திகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், திருத்தந்தையின் குரலை பல மொழிகளின் வழியாக உலகில் உள்ள மக்களுக்கு எடுத்துரைத்து வரும் அவர்களின் பணிக்கும், அமைதி மற்றும் உண்மையுடன் தொடர்புகொள்வதில் அனைத்து பத்திரிகையாளர்கள் அளிக்கும் பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.
இளைஞர் யூபிலி விழாவிற்காக உரோமில் கூடியிருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை அன்புடன் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இளைஞர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவைச் சந்திக்கவும், அவரை தொடர்ந்து பின்பற்றுவதற்கான நம்பிக்கையிலும் அர்ப்பணிப்பிலும் அவரால் பலப்படுத்தப்படவும் ஒரு வாய்ப்பாக இந்த இளைஞர்களுக்கான யூபிலி இருக்கும் என்று நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
