தேடுதல்

அவுரே புனித அன்னா திருத்தலம் அவுரே புனித அன்னா திருத்தலம்  

அவுரே புனித அன்னா திருத்தலத்தின் 400 - ஆவது ஆண்டு

எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டு என்னும் இந்த யூபிலி ஆண்டிலிருந்து ஏராளமான ஆன்மீக நன்மைகளையும் விண்ணக ஆசீர்களையும் மக்கள் பெறுகின்றனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அவுரேயில் உள்ள புனித அன்னா திருத்தலத்தின் 400-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருவழிபாட்டு விழாக்களுக்கான சிறப்புத் தூதராக, திருவழிபாடு மற்றும் திருச்சடங்குகளின் ஒழுங்குமுறைக்கான திருப்பீடத் துறையின் முன்னாள் தலைவர், கர்தினால் ராபர்ட் சாரா அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

2025ஆம் ஆண்டு ஜூலை 25, 26 ஆகிய நாள்களில் பிரான்சின் வானேஸ் மறைமாவட்டத்தில் உள்ள அவுரேயில் சிறப்பிக்கப்பட இருக்கும் புனித அன்னா திருவிழா வழிபாட்டு நிகழ்வுகளுக்குத் திருத்தந்தையின் சார்பில் பங்கேற்க கர்தினால் ராபர்ட் சாரா அவர்களை நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரெட்டன் இவான் நிக்கோலாஸ் என்னும் விவசாயிக்கு புனித அன்னா காட்சியளித்ததன் 400ஆவது ஆண்டானது அவுரே பகுதியில் உள்ள திருத்தலத்தில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.

புனித அன்னா திருவிழா நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் ஆற்றலையும் உறுதியையும் புதுப்பித்து, கடவுளின் வாக்குறுதிகளைப் பெறுவதில் தங்கள் நம்பிக்கையை உயிர்ப்பிக்க வேண்டும் என்றும், எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டு என்னும் இந்த யூபிலி ஆண்டிலிருந்து ஏராளமான ஆன்மீக நன்மைகளையும் விண்ணக ஆசீர்களையும் பெறுகின்றனர் என்றும் செய்தி ஒன்றில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இறைவனின் விண்ணக ஆசீரானது சந்தேகத்திற்கு இடமின்றி மக்களின் அன்றாட பணியில் பெரிதும் பங்களிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், இரக்கத்தின் அடையாளமாகவும், விண்ணகக் கொடைகளின் உறுதிமொழியாகவும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரினை திருப்பயணிகளுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

எளிய விவசாயிக்கு புனித அன்னா காட்சியளித்த இடத்தில் திருமுழுக்கு யோவானுக்கு எழுப்பட்ட ஆலயமானது, நாளடைவில் அவுரேயின் புனித அன்னாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரபலமான திருத்தலமாகவும், எண்ணற்ற திருப்பயணிகள் வரும் மிகவும் விரும்பத்தக்க இடமாகவும் இத்திருத்தலம் மாறியது என்றும், 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அங்கு வந்து குடும்பங்களில் நம்பிக்கை, எதிர்நோக்கு தொண்டு ஆகியவற்றை வளர்த்து உயிர்ப்பிக்க வலியுறுத்தினார் என்றும் மொழிந்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஜூலை 2025, 13:15