மாற்றத்தின் முகவர்களாக இருக்கும் சாரணர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தாழ்ச்சி, சேவை மனப்பான்மை, கிறிஸ்துவுடனான ஆழமான உறவு ஆகியவை நமக்குள் கிறிஸ்தவ விழுமியங்களை வேரூன்றச் செய்கின்றன என்றும், உள் மனமாற்றம் மட்டுமே பழக்கவழக்கங்கள் மற்றும் மனநிலைகளை மாற்றுவதை சாத்தியமாக்குகிறது, சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் ஒரு புதிய வழியாக மொழிபெயர்க்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை 24 முதல் 28 வரை பிரான்சின் Jambville பகுதியில் நடைபெறும் சாரணர் இயக்க மாணவர்கள் மற்றும் வழிகாட்டிகளின் ("Clameurs!" Gathering) கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், காலநிலை மாற்றத்தின் பணியில் சாரணர் இயக்கத்தை ஈடுபடுத்தவதன் வழியாக மாற்றத்தின் முகவர்களாக இருக்கும் அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் எடுத்துரைத்துள்ளார்.
படைப்பின் கூக்குரலைக் கவனமாகக் கேட்க சாரணர் இயக்கத்தார் அழைக்கப்படுகின்றார்கள் என்றும், கடவுள் தனது பணியை ஒப்படைத்துள்ள அனைத்து மனிதகுலத்திற்கும் இந்த காலநிலை அவசரம் அவசியம் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
அதிகரித்து வரும் கடுமையான சுற்றுச்சூழல் பேரழிவால், மாசுபாடு, காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, வாழ்க்கை சீரழிவு, சமூக சீரழிவு, உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள், குடிநீர் பற்றாக்குறை ஆகியவை ஏற்படுகின்றன என்றும் இவற்றை எதிர்கொண்டு, விஷயங்களின் வரிசையை மாற்றியமைக்க அனைவருக்கும் சுற்றுச்சூழல் கல்வி அவசியம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
நமது பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கான புதிய பாதைகள் மற்றும் திசைகளைக் கண்டறிய வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், உலகைக் கைப்பற்ற விரும்புவது அதை அடிபணியச் செய்வதற்காக அல்ல, மாறாக கடவுளிடமிருந்து வரும் வாழ்க்கைக்குப் பணியாற்றுவதற்காகவே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் சூழலில் உடன்பிறந்த உணர்வு மற்றும் அமைதியின் தூதர்களாக இருக்க வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், பல்வேறு கலாச்சார மரபுகள், சமூக பின்னணி, வெவ்வேறு ஆளுமைகள், வயதுகள் கொண்ட பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு செல்வம், ஒரு சொத்து என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்தவர்களின் ஆயுதங்களான நம்பிக்கை, உண்மை, நீதி மற்றும் அமைதி நற்செய்தி ஆகியவை அமைதியான உலகத்தை கற்பனை செய்ய நம்மை அனுமதிக்கிறது என்றும் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கைப் பயணத்தில் நம்மை வழிநடத்துகின்ற, ஒளிரச் செய்கின்ற, ஆறுதல்படுத்துகின்ற உறுதிப்பூசுதல் திருவருளடையாளம் பெறும் அனைவரையும் வாழ்த்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
