தேடுதல்

திருத்தந்தையை சந்திக்கும் இணைய வழி மறைப்பணியாளார்கள் திருத்தந்தையை சந்திக்கும் இணைய வழி மறைப்பணியாளார்கள்   (@Vatican Media)

உலக அமைதிக்காக இணைய வழி மறைப்பணியாளர்கள்

திருத்தந்தை 14 ஆம் லியோ: கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, இயற்கைக்கு எதிரான தகவல்களையும், உண்மையற்ற தகவல்களையும் தவிர்த்து உண்மையின் ஒளியில் உலகை ஒளிர்விக்க வேண்டும்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

உங்களுக்கு அமைதி உரித்தாகட்டும் என்ற உயிர்த்த ஆண்டவரின் அமைதி நம் இதயங்களிலும், நம் செயல்களிலும்  இருக்கட்டும் என,  பகைமை மற்றும் போர் சூழ்ந்த இக்காலத்தில் அமைதியின் தேவை குறித்து, இணைய வழியில் மறைப்பணியாற்றுவோருக்கான யூபிலி நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றிய  திருத்தந்தை 14 ஆம் லியோ அவர்கள்  கூறினார்.

தந்தைக்கடவுளின் மன்னிப்பையும், அவர் அளிக்கும் வாழ்வையும் கொண்டுவருகின்ற, அன்பின் பாதையைக் காட்டுகின்ற,  உயிர்த்த ஆண்டவர் வழங்கும் அமைதியை உலகிற்கு  அறிவிப்பதே திருஅவையின் பணி என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தங்களின் அர்ப்பணத்தை புதுப்பித்துக்கொள்ள உரோமை வந்திருக்கும் சமூக ஊடகங்கள் வழியாக கிறிஸ்தவ நம்பிக்கையை அறிவிக்கும் இணைய வழி மறைப்பணியாளார்கள்,   உலகின் கடையெல்லை வரை உள்ள அனைவருக்கும் குறிப்பாக, நம்பிக்கையிழந்தவர்களுக்கும் உயிர்த்த ஆண்டவரின் அமைதியை அறிவிப்பதே திருஅவை ஒப்படைத்திருக்கும் பணி என்று தெரிவித்தார் திருத்தந்தை.

சமூக ஊடகங்களில்  சந்திக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளிடமும் இயேசுவின் துன்புறும் உடலைக் காண வேண்டுமெனவும், தொழில்நுட்பத்தால் ஆழமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இன்றைய கலாச்சாரத்தில் மனிதநேயத்தை உறுதிசெய்யும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு எனவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

அறிவியலும் தொழில்நுட்பமும் நம்முடைய வாழ்க்கை முறையிலும், நம்மை  உணர்வதிலும், கடவுளையும், பிறரையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன என்று கூறிய திருத்தந்தை,  மனிதனால் உருவாக்கப்பட்ட எதுவும் பிறர் மாண்பைக்  குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது   என்றும்  வலியுறுத்தினார்.

கிறிஸ்தவ மனிதநேயக் கலாச்சாரத்தை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வளர்ப்பதே நம் நோக்கம் என்றும், அதுவே திருஅவை வலையமைப்பின் அழகு என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இயேசு தனது முதல் சீடர்களை அழைத்த போது, அவர்கள் தங்கள் வலைகளை சரிசெய்து கொண்டிருந்தார்கள் என்று சுட்டிக்காட்டி, இந்த இணைய வழி மறைத்தூதுப்பணிக்கான யூபிலி  உறவு, அன்பு, பகிர்வு, இரக்கம், நம்பிக்கை போன்ற வலைகளை சரி செய்துகொள்ளவும் அழைப்பு விடுக்கிறது என்று  திருத்தந்தை கூறினார்.

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், ஊடகத்தின் ஒவ்வொரு சந்திப்பிலும் எல்லையற்ற அன்பின் மகத்துவத்தை அனுபவிக்க வலையமைப்புகள் உதவ வேண்டும் என்று தெரிவித்தார் திருத்தந்தை.

பிரிவுகளையும், தேவையற்ற  சிந்தனைகளையும், சுயநலவாதத்தையும் உடைக்கும் ஒன்றிப்பின் தூதர்களாக  விளங்க வேண்டுமெனவும், கிறிஸ்துவை மையமாகக்  கொண்டு,  இயற்கைக்கு எதிரான தகவல்களையும், உண்மையற்ற தகவல்களையும் தவிர்த்து உண்மையின் ஒளியில் உலகை ஒளிர்விக்க வேண்டுமெனவும் கூறினார் திருத்தந்தை.

இறுதியாக,கடவுள் மீதும், திருஅவை மீதும்   அவர்கள் கொண்டிருந்த  அன்பிற்கும், இணைய தளத்தின் வழியாக செய்து கொண்டிருக்கின்ற அனைத்து நற்செயல்களுக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை,  அனைவருக்கும் தனது ஆசிரை வழங்கி உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஜூலை 2025, 14:57