தேடுதல்

புகுநிலைக் கிறிஸ்தவர்களாக மாற விரும்பும் பிரான்ஸ் நாட்டு இளையோரை சந்திக்கும் திருத்தந்தை. புகுநிலைக் கிறிஸ்தவர்களாக மாற விரும்பும் பிரான்ஸ் நாட்டு இளையோரை சந்திக்கும் திருத்தந்தை.  (@Vatican Media)

இறைக்குடும்பத்தின் முழு அங்கத்தினராக நம்மை மாற்றும் திருமுழுக்கு

புகுநிலை கிறிஸ்தவம் என்பது திருமுழுக்கோடு முடிவடைவதில்லை, மாறாக அது ஒரு தொடர் விசுவாசப் பயணம், அப்பயணத்தில் நாம் அனைவரும் ஒருவர் மற்றவரோடு நம் விசுவாச பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவையில் திருமுழுக்குப் பெற்று புகுநிலைக் கிறிஸ்தவர்களாக மாற ஆவல் கொண்டிருக்கும் பிரான்ஸ் நாட்டு இளையோரையும் அவர்களைத் தயாரித்துவரும் அருள்பணியாளர்கள் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்களை ஜூலை 29 செவ்வாய்க்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 14ஆம் லியோ.

திருமுழுக்கு என்பது நம் ஒவ்வொருவரையும் ஒரு பெரிய இறைக்குடும்பத்தின் முழு அங்கத்தினர்களாக மாற்றுகிறது என்ற திருத்தந்தை, இதன் வழி நாம் நம்மை மீட்கும் அன்பை அனுபவித்து இறைவனுக்கு பதிலுரை வழங்குகிறோம் எனவும் எடுத்துரைத்தார்.

புகுநிலைக் கிறிஸ்தவர்களாகவும், புதிதாக திருமுழுக்குப் பெற்றவர்களாகவும் இருக்கும் இளையோர், தங்களை வரவேற்கும் சமூகத்தில் உறைந்திருக்கும் ஆண்டவரில் தனிப்பட்ட முறையில் அனுபவங்களைக் கொள்கின்றனர் எனவும் கூறினார் திருத்தந்தை.

திருமுழுக்கு வழியாக நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகளாக, இறைவனின் பெயரால் நம்மை ஏற்றுக்கொள்கிறோம் என்ற திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், தந்தையாம் இறைவனுடனும், அனைத்துக் கொடைகளுக்கும் ஆதாரமாக இருக்கும் தூய ஆவியாருடனும் நம் உறவுக்கு அறிமுகப்படுத்துபவர் இயேசுவே எனவும் எடுத்துரைத்தார்.

பாராமுகம், பிறரை வெறுத்து ஒதுக்குதல், போதைப்பொருள், இலகுவான வாழ்வை நாடிச் செல்லல், கேளிக்கைக்காக பாலியலை பயன்படுத்தல், மனிதர்களை பொருட்கள் போல் நடத்துதல், அநீதி போன்ற மரணக்கலாச்சாரத்தை வெறுத்து, வாழ்வுக்கு நம்மை அறிமுகப்படுத்துவதே திருமுழுக்கு என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருமுழுக்கு என்பது நம்மை இயேசுவின் சான்றுகளாக மாற்றுகின்றது, அதேவேளை நம்மைக் குணப்படுத்தும் மருத்துவராகவும், நம்மை புதுப்பிக்கும் நீரூற்றாகவும்,  நீதியாகவும், பலமாகவும், பாதையாகவும், ஒளியாகவும் இறைவனைக் கண்டுகொள்ள உதவுகிறது என்ற திருத்தந்தை, தேவையிலிருப்போருக்கு நாம் எப்போதும் மிக அருகில் இருப்போராக மாறவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

புகுநிலை கிறிஸ்தவம் என்பது திருமுழுக்கோடு முடிவடைவதில்லை, மாறாக அது ஒரு தோடர் விசுவாசப் பயணம், அப்பயணத்தில் நாம் அனைவரும் ஒருவர் மற்றவரோடு நம் விசுவாசப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற திருத்தந்தை 14ஆம் லியோ, இறைவேண்டல், திருஅடையாளங்களை நடைமுறைப்படுத்தல், குறிப்பாக ஒப்புரவு அருள்சாதனத்தை செயல்படுத்தல், சமூக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்றவைகளையும் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஜூலை 2025, 15:22