உரோம் பெட்ரோல் நிலைய விபத்து குறித்து திருத்தந்தை
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஜூலை 4 வெள்ளியன்று காலை, உரோமை மறைமாவட்டத்தின் மையத்தில் உள்ள Prenestino Labicano பகுதியில் நடந்த பெட்ரோல் நிலைய விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும், இந்தத் துயரமான விபத்தின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தனது x தள பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 14ஆம் லியோ.
உரோமையின் கிழக்கில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில், 8 காவல்துறை அதிகாரிகள், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட குறைந்தது 9 பேர் காயமடைந்ததாக இத்தாலிய தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் நிலையக் குழாய்களின் மீது ஒரு கனரக வாகனம் மோதியதால் ஏற்பட்ட இந்த விபத்தினை சரி செய்யும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இந்த விபத்தினால் ஏற்பட்ட சத்தம் இத்தாலிய தலைநகரம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது என்றும், அவர்கள் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் நிலைய விபத்தினால் ஏற்பட்ட தீ, அதன் சுற்று பகுதிகள் முழுவதும் பரவி பல கட்டிடங்களை சேதப்படுத்தியதாகவும், காவல்துறை அதிகாரிகள், சில மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரும் காயமடைந்துள்ளதாகவும், மேலும் அவர்களில் சிலர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் அளித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
