தேடுதல்

காங்கோவில் சேதமடைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் காங்கோவில் சேதமடைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள்  (AFP or licensors)

விசுவாசிகளின் இரத்தம் அமைதியின் விதையாகட்டும்

திருத்தந்தை 14-ஆம் லியோ : காங்கோவின் கோமண்டா நகரில் கத்தோலிக்கக் கோவிலின் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட மறைச்சாட்சிகளின் இரத்தம் அந்நாட்டு மக்களின் அமைதி, நல்லிணக்கம், உடன்பிறந்த உணர்வு மற்றும் அன்பின் விதையாக மாறட்டும்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

காங்கோவின்  கோமண்டா நகரில் கத்தோலிக்கக் கோவிலின்  மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட மறைச்சாட்சிகளின்    இரத்தம் அந்நாட்டு மக்களின்  அமைதி, நல்லிணக்கம், உடன்பிறந்த உணர்வு மற்றும் அன்பின் விதையாக மாறட்டும் என்று திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது இரங்கல் செய்தியில்  தெரிவித்துள்ளார்.

காங்கோ ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Fulgence Muteba Mugalu  அவர்களுக்கு  அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், திருஅவையின்  சார்பாக, திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் அனுதாபங்களையும், இறைவேண்டல்களையும் தெரிவித்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

கிழக்கு காங்கோவின் இடூரி மாநிலத்தில்  உள்ள கோவிலில் ஞாயிறு திருப்பலியின் போது நடத்தப்பட்ட தாக்குதலில்  கோவிலில் கூடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட  38 பேரும், அருகிலுள்ள ஒரு கிராமத்தில் மேலும் ஐந்து பேர் என மக்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கோ விசுவாசிகளின் இறப்புச் செய்தி கேட்டு திருத்தந்தை மிகவும் வருத்தம் தெரிவித்து, அவ்விசுவாசிகளின் இரத்தம், அமைதி மற்றும் அன்பின் விதையாக மாறட்டும் என்று கூறியதாக கர்தினால் பரோலின் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலால்  துயரத்திற்குள்ளான குடும்பங்கள் மற்றும் தலத் திருஅவையுடன் தான் ஒன்றித்திருப்பதாக தனது ஆன்மிக நெருக்கத்தையும், இறைவேண்டல்களையும் திருத்தந்தை தனது செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இத்தாக்குதல் தங்களின் விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட அப்பகுதி மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக கடினமாக உழைக்க நம்மை அழைக்கிறது என்றும்  திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

இறுதியாக, தாக்குதலால் துயரமடைந்துள்ள குடும்பங்கள் மற்றும் தலத்திருஅவை மற்றும் அந்நாடு முழுவதற்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஜூலை 2025, 16:16