தேடுதல்

இளையோருக்கு செய்தி வழங்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ இளையோருக்கு செய்தி வழங்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

உலகம் விரும்பும் நம்பிக்கையின் செய்தி இளையோரே!

“உலகிற்கு நீங்கள் உப்பாகவும், ஒளியாகவும் இருக்கிறீர்கள்; கிறிஸ்துவுக்காக நீங்கள் எழுப்பும் பெருங்குரல் உலகின் கடையெல்லை வரை கேட்கட்டும்” : திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஜூலை 29, இச்செவ்வாய் மாலை, புனித பேதுரு பெருங்கோவிலின் வளாகத்தில், புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் தலைமையில் நிறைவேற்றப்பட்ட இளையோருக்கான யூபிலியின் தொடக்கவிழாத் திருப்பலிக்குப் பிறகு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அங்குக் கூடியிருந்த இளையோரை வரவேற்று வாழ்த்துக் கூறினார்.

“உலகிற்கு நீங்கள் உப்பாகவும், ஒளியாகவும் இருக்கிறீர்கள்” என்று இளையோரை நோக்கி கூறிய திருத்தந்தை, “கிறிஸ்துவுக்காக நீங்கள் எழுப்பும் பெருங்குரல் உலகின்  கடையெல்லை வரை கேட்கட்டும்” என்றும் எடுத்துரைத்தார்.

மேலும், “நம்பிக்கையின் செய்தி தேவைப்படும் இவ்வுலகிற்கு, நம்பிக்கையைக் கொண்டுச் செல்ல வேண்டும்” என்றும், “இளையோராகிய நீங்களே அந்த நம்பிக்கையின் செய்தி” என்றும் அவர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.

“இளையோராகிய நீங்கள் அனைவரும் எப்போதும் உலகில் நம்பிக்கையின் அடையாளங்களாக இருக்கிறீர்கள்” என்று நம்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, “அமைதியை விரும்பும் நாம் அனைவரும், கிறிஸ்துவில் மீதுள்ள நம்பிக்கையில் ஒன்றாக பயணித்து, உலக அமைதிக்காக குரல் கொடுத்து, இறைவேண்டல் செய்வோம்” என்றும் கூறினார்.

இறுதியாக, “இந்த உலகம் தேடும், கிறிஸ்துவின் அமைதிக்கு நாம் அனைவரும் சான்று பகர்வோம்” என்று கூறி அவர்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் வழங்கினார் திருத்தந்தை.

திருப்பலியின் போது மறையுரை வழங்கிய பேராயர் Fisichella அவர்கள், “நீங்கள் அனைவரும் உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியதுடன், “உயிர்த்த இயேசுவை கண்டு, விசுவாசித்து, அவ்விசுவாசத்தை  செயலாக மாற்றும் நம் அனைவரும் ஒரு போதும் அஞ்ச வேண்டாம்” என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜூலை 2025, 12:40