திருக்குடும்பத்தில் விளங்கிய பண்புகள் கொண்டு சிறந்து வாழுங்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருக்குடும்பத்தில் விளங்கிய ஒன்றிப்பின் அன்பு, எளிமை, கண்டிப்பு, அழகு, புனிதம், மீற முடியாத தன்மை, மென்மையான கற்பித்தல், சமூகத்தில் அதன் இயற்கையான மற்றும் ஈடுசெய்ய முடியாத பங்கு போன்றவற்றைக் கடைபிடித்து வாழ வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 23, சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில், திருக்குடும்ப புதல்வியர் மறைப்பணியாளர்கள் சபை(35), திருக்குடும்ப அப்போஸ்தலர் நிறுவன சபை(20), நாசரேத் புதல்வியர் சபை(50), தூய மரியா பிறரன்புப் பணிகள் சபை (30) என 4 சபைகளின் பொதுப்பேரவையில் பங்கேற்கும் அருள்சகோதரிகள் ஏறக்குறைய 135 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
சபையின் நிறுவனர்கள் அனைவருக்கும் தூய ஆவியார் பொது நன்மைக்காக குறிப்பிட்டக் கொடைகளை வழங்கினார் என்றும், நாசரேத் திருக்குடும்பத்தின் மதிப்புகளை வாழவும், செபத்தின் அனலைப் பகிரவும், அன்பின் உருவாக்கம் மற்றும் தூய்மைத்தனத்தின் மாதிரிகையை பகிரவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருத்தந்தை புனித ஆறாம் பவுல், புனித பூமிக்கான தனது திருத்தூதுப்பயணத்தின் போது, மக்களுக்கு எடுத்துரைத்த கருத்துக்களான, “இயேசு, மரியா மற்றும் யோசேப்பைப் பார்ப்பதன் வழியாக, குடும்பத்தின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்” என்பதை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.
திருக்குடும்பத்தில் நிலவிய அத்தனை மதிப்பீடுகளும் நல் உணர்வுகளும் இக்காலத்தில் நமக்கு மிகவும் தேவையாக உள்ளன என்றும், குடும்பங்களில் உள்ளோருக்கு, செபம், முன்மாதிரி மற்றும் கவனமுள்ள சமூக நடவடிக்கை வழியாக ஆதரவு, ஊக்கம் மற்றும் முன்னோக்கிச் செல்வதற்கான ஆர்வம் தேவை என்றும் கூறினார் திருத்தந்தை.
அர்ப்பணிக்கப்பட்ட பெண் துறவிகளாக தங்களது சான்றுள்ள வாழ்க்கை மற்றும் பணிகள் வழியாக துறவற சபை அருள்சகோதரிகள், சமூகத்தில் வாழும் பெண்கள் குழந்தைகள் தாய் தந்தையர்கள், முதியோர்கள், இளைஞர்களுக்குப் பணியாற்ற முடியும் என்று கூறினார் திருத்தந்தை.
திருக்குடும்பத்தை வகைப்படுத்தும் நற்பண்புகள் மற்றும் தொண்டுப்பணிகள் நமது இல்லங்களிலும் பணித்தளங்களிலும் சிறக்க வேண்டும், குடும்பமாக இருப்பதன் வழியாக, பணியாற்றுபவர்களுடன் உடனிருந்து வாழ வேண்டும் என்றும், செபம், செவிசாய்த்தல், ஆலோசனை வழங்குதல் உதவி செய்தல் போன்றவற்றின் வழியாக ஒப்படைக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
