தேடுதல்

அருளாளர் மரியா துரொன்காத்தி அருளாளர் மரியா துரொன்காத்தி  

அக்டோபரில் புனிதராக உயர்த்தப்பட உள்ள அருள்சகோதரி மரியா துரொன்காத்தி

2012-ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் அருளாளராக அறிவிக்கப்பட்ட அருள்சகோதரி மரியா துரொன்காத்தி அவர்கள், தற்போது அக்டோபர் 19 அன்று திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட இருக்கின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

2025 ஆம் ஆண்டு அக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை உலக மறைப்பணி ஞாயிறன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட இருக்கின்றார் அருளாளர் அருள்சகோதரி Maria Troncatti.

"நான் ஒரு மறைப்பணியாளராக இருக்க வேண்டும்" என்பதையே தனது உறுதியான நம்பிக்கையாகக் கொண்டு வாழ்ந்த இத்தாலியைச் சார்ந்த சலேசிய சபை அருள்சகோதரியான Maria Troncatti அவர்கள், 1883ஆம் ஆண்டு பிப்ரவரி 16, அன்று பிரேசியாவில் பிறந்தார்.

1908 -ஆம் ஆண்டு நிஸ்ஸா மான்ஃபெராடோவில் Nizza Monferrato என்னும் இடத்தில் சலேசிய சபை அருள்சகோதரியாக தனது முதல் வார்த்தைப்பாடுகளை ஏற்ற அருளாளர் அவர்கள், முதல் உலகப் போரின் போது, ​​அவர் வராஸ்ஸேயில் உள்ள இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கத்தில் செவிலியராகப் பணியாற்றினார். அப்போது அங்கு ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அவர், அவ்வெள்ளத்தில் இருந்து தான் காப்பாற்றப்பட்டால் தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்து மறைப்பணியாளராகப் பணியாற்ற உறுதிபூண்டார்.

இறைத்திருவுளத்தால் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட அருளாளர் அவர்கள், 1922-ஆம் ஆண்டில் சலேசிய மறைப்பணியாளராக ஈக்வதோர் என்னும் நாட்டிற்குச் சென்றார்.

டொமினிகோ கோமின் என்னும் ஆயர் மற்றும் இரண்டு அருள்சகோதரிகளுடன் இந்தியாவில் உள்ள ஷுவார் அமேசான் மழைக்காடுகளை அடைந்த அருளாளர் மரியா அவர்கள், தோட்டாவால் காயமடைந்த ஒரு பழங்குடித் தலைவரின் மகளை தனது எளிய கையடக்கக் கத்தியைப் பயன்படுத்தி காப்பாற்றியதால் மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். அந்த நிகழ்விலிருந்து மக்கள் அனைவராலும் "La Madrecita" என்று அன்போடு அழைக்கப்பட்டார்

நாற்பத்து நான்கு ஆண்டுகளாக, சகோதரி மரியா பழங்குடி மக்களுக்கு கடவுளின் வார்த்தையை அறிவித்ததோடு, அவர்களுக்கு ஒரு செவிலியர், அறுவை சிகிச்சை நிபுணர், எலும்பியல் நிபுணர், பல் மருத்துவர் மற்றும் மருந்தாளுநராகவும் பணியாற்றினார்.

1969 ஆகஸ்ட் 25, அன்று, குயிட்டோவிற்கு சென்ற அவர், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாக அவ்விபத்தில் இறந்தார், 2012-ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் அருளாளராக அறிவிக்கப்பட்ட அவர், தற்போது அக்டோபர் 19 அன்று திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட இருக்கின்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஆகஸ்ட் 2025, 12:27