அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றிபெற வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாள மக்களுடன் தனது உடனிருப்பை வெளிப்படுத்துவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பேரழிவின் விளைவால் துன்புறுபவர்கள் அனைவருக்காகவும் செபிப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 17, ஞாயிறன்று லிபர்த்தா வளாகத்தில் கூடியிருந்த இறைமக்களுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
போர்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்றும், மக்களின் பொது நன்மைக்கான பேச்சுவார்த்தைகள் எப்போதும் முதலிடம் பெற செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த கோடை காலத்தில், பல மாறுபட்ட கலாச்சார மற்றும் நற்செய்தி முயற்சிகள் பற்றிய செய்திகளைப் பெறுவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், விடுமுறைக்கான இடங்களில் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வுகள், நற்செய்தியின் மீதான ஆர்வம் அனைத்து வயது குழுக்கள் மற்றும் சங்கங்களின் படைப்பாற்றலையும் அர்ப்பணிப்பையும் எவ்வாறு தூண்டுகிறது என்பதைப் பார்ப்பது அழகாக இருக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
அண்மைய நாள்களில் ரிச்சோனில் நடந்த இளைஞர் பணியை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், இந்நிகழ்வை ஊக்கப்படுத்துபவர்கள் மற்றும் இந்நிகழ்வுகளில் பல்வேறு வழிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் தனது நன்றியினையும் தெரிவித்தார்.
கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், 50-ஆம் ஆண்டு கொண்டாடும் கோகாலியோ AIDO குழு, பிரேசியாவின் கவர்டோவிலிருந்து மிதிவண்டியில் வந்த AVIS இரத்த தானம் செய்பவர்கள், காசரானோவிலிருந்து வந்த இளைஞர்கள், புனித அந்தோணியின் பிரான்சிஸ்கன் அருள்சகோதரிகள் ஆகிய அனைவரையும் வரவேற்றார்.
போலந்தில் உள்ள பைக்கரி அன்னை மரியா திருத்தலத்திற்குச் செல்லும் மாபெரும் திருயாத்திரைப் பயணிகளை வாழ்த்தி ஆசீர்வதித்த திருத்தந்தை அவர்கள் அனைவருக்கும் தனது இனிய ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்களைக் கூறி செப விண்ணப்பங்களை நிறைவுய் செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
