தேடுதல்

வேறுபாட்டின் சுவர்களைத் தகர்த்து எறிபவர்களாவோம்

கடவுள் கொண்டு வர விரும்பும் தீ, ஆயுதங்களின் நெருப்போ, மற்றவர்களை எரிக்கும் வார்த்தைகளின் நெருப்போ அல்ல, மாறாக, தன்னைத் தாழ்த்தி பணியாற்றும் அன்பின் நெருப்பு, அக்கறையுடனும், ஆணவத்துடனும் சாந்தத்துடனும் அலட்சியத்தை எதிர்க்கும் நன்மையின் நெருப்பு - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடல், அவரது திருஅவையைச் சார்ந்தவர்கள் என்றும், வெவ்வேறு தோற்றம், பொருளாதார சூழ்நிலைகள், மன நிலைகள் மற்றும் உணர்ச்சி நிலைகள் என்னும் சுவர்களை தகர்த்தெறிந்து மக்களிடையே சந்திப்புகளை உருவாக்குபவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 17, ஞாயிறன்று காஸ்தல் கந்தோல்போவிற்கு விடுமுறைக்காக சென்றிருக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அங்குள்ள அன்னை மரியா ரொத்தோன்ந்தா திருத்தலத்தில், அல்பானோ லஷியாலே மறைமாவட்ட காரித்தாஸ் பணியாளர்கள் மற்றும் ஏழைகளுக்காக நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரையின்போது இவ்வாறு கூறினார்.

சில நேரங்களில் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கும் சோர்வு மற்றும் பயத்துடன் ஆலயத்திற்கு வரும் நாம் ஒவ்வொருவரும், தனியாக இல்லை. மாறாக, கடவுளின் வார்த்தையையும் உடலையும் பெறுவதன் வாயிலாக ஒருவர் மற்றவருடன் இணைந்து இருக்கின்றோம் என்றும், உயிர்ப்பின் தூய ஆவியார் நம்மிடையேயும் நமக்குள்ளும் அமைதியாக இருந்து, ஒவ்வொரு நாளும் நம் இதயம் இறப்பிற்கு அப்பாற்பட்ட வாழ்வைப் பெற உதவுகின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

வட்ட வடிவத்தில் இருக்கும் அன்னை மரியாவின் பழங்கால திருத்தலமானது வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகம் மற்றும் பிற ஆலய வளாகங்கள் போல வட்ட வடிவில் கடவுளின் அரவணைப்பை நமக்கு வெளிப்படுத்துகின்றன என்றும், திருத்தலத்தின் உள்புறமானது நம்மை வரவேற்று உண்மையான மனிதத்துவத்தை நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

நமது வறுமை, பாதிப்பு மற்றும் தோல்விகளால் நாம் வெறுக்கப்பட்டு தீர்வையிடப்பட்டாலும், இறுதியில் கடவுளின் மென்மையான பலம், எல்லையற்ற அன்பு, நிபந்தனையற்ற அன்புக்குள் நாம் வரவேற்கப்படுகின்றோம் என்றும், இயேசுவின் தாயான மரியா நமக்கு கடவுளது தாய்மையின் அடையாளமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அன்னை மரியாவில் தாய்த்திருஅவையாக..

அன்னை மரியாவில் நாம் ஒரு தாய்த்திருவையாக மாறுகிறோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இது உலக ஆற்றலால் அல்ல, மாறாக அன்பின் வழியாக  மீண்டும் மீண்டும் உருவாகும் தாய்த்திருஅவையாக மாறுகின்றோம் என்றும் தெரிவித்தார்.

இன்றைய நற்செய்தியில், “மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்." (லூக் 12:51) என்று கூறும் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே நீருமா பிரிவைனையை ஏற்படுத்த வந்தீர் என்று சொல்கின்றீர்? ஏற்கனவே எங்களிடையே பல பிரிவினைகள் இருக்கின்றன. என் அமைதியை நான் உங்களுக்குத் தருகின்றேன் என்று கூறியது நீரல்லவா”? என்று நம் உள்ளத்தில் கூறத்தோன்றும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அதற்கு  இயேசு நம்மை நோக்கி, “ஆம் நான் தான். ஆனால் இறுதி இராவுணவின்போது, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். (யோவான் 14:27) என்று கூறியதும் நான் தானே” என்று பதிலளிப்பார் என்று கூறினார் திருத்தந்தை.

உலகம் நம்மை ஆறுதலுக்குப் பதிலாக அமைதியை பரிமாறிக் கொள்ளப் பழக்கப்படுத்துகிறது என்றும், நிதானத்திற்குப் பதிலாக நன்மையைப் பரிமாரிக்கொள்ள அழைப்புவிடுக்கின்றது என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடவுளின் அமைதி நம்மில் வர, கடவுளின் அருள் நம்மில் நிலைக்கவே இயேசு நம்மிடம், “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” (லூக் 12:49). என்று கூறுகின்றார் என்றும் கூறினார்.

கடவுள் கொண்டு வர விரும்பும் நெருப்பு

கடவுள் கொண்டு வர விரும்பும் தீயானது, ஆயுதங்களின் நெருப்போ, மற்றவர்களை எரிக்கும் வார்த்தைகளின் நெருப்போ அல்ல, மாறாக, தன்னைத் தாழ்த்தி பணியாற்றும் அன்பின் நெருப்பு, அக்கறையுடனும், ஆணவத்துடனும் சாந்தத்துடனும் அலட்சியத்தை எதிர்க்கும் நன்மையின் நெருப்பு என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுளின் அந்த நெருப்பானது ஆயுதங்களைப் போல அதிக விலை கொடுக்காது, மாறாக உலகத்தைப் புதுப்பிக்கிறது என்றும், தவறான புரிதல், ஏளனம், துன்புறுத்தலை விட நமக்குள் இருக்கும் அவரது அமைதி என்னும் நெருப்பை விட பெரிய அமைதி எதுவும் இல்லை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

உதவி செய்பவர்கள் மற்றும் பெறுபவர்கள், கொடுப்பவர்கள் மற்றும் பெறுபவர்கள், ஏழைகளாகத் தோன்றுபவர்கள், நேரம், திறமைகள் மற்றும் உதவியை வழங்குவதாக உணருபவர்கள் ஆகியோருக்கு இடையில் வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நாம் அனைவரும் கடவுளின் திருஅவையைச் சார்ந்தவர்கள், ஏழைகள் அனைவரும் விலையேறப்பெற்றவர்கள், கடவுளின் வார்த்தையைப் பெற்ற தனித்துவம் மிக்கவர்கள் என்றும் கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஆகஸ்ட் 2025, 14:04