தேடுதல்

 Medjugorje இல் இளைஞர்கள் Medjugorje இல் இளைஞர்கள்  

வாழ்க்கைப்பாதையில் தனியாக அல்ல, ஒன்றிணைந்து நடப்போம்

“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற வரிகளானது கடவுளை நோக்கிய நமது பயணத்தை விருப்பத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றது. கடவுளது இல்லத்தை நோக்கிச்செல்லும் நமக்கு அவருடைய அன்பு காத்திருக்கின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாழ்க்கைப் பாதையில், நாம் ஒருபோதும் தனியாக நடப்பதில்லை. நமது பாதை எப்போதும் வேறொருவரின் பாதையுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்றும், நாம் ஒருவர் மற்றவரைச் சந்திப்பதற்காகவும், ஒன்றிணைந்து நடப்பதற்காகவும், ஒன்றாக இணைந்து ஒரு பொதுவான இலக்கைக் கண்டுபிடிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்ட் 4 முதல் 8 வரை மெஜுகோரியில் நடைபெறும் 36வது இளைஞர் விழாவில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற திருப்பாடல் (122:1) வரிகளைக் கருப்பொருளாகக் கொண்டு தியானிக்க இருக்கும் இளைஞர்களை வாழ்த்தியுள்ளார்.

“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற வரிகளானது கடவுளை நோக்கிய நமது பயணத்தை, விருப்பத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றது என்றும், கடவுளது இல்லத்தை நோக்கிச் செல்லும் நமக்கு அவருடைய அன்பு காத்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

"நானே வழி" (யோவான் 14:6) என்று கூறிய இயேசு, நம்முடன் வருகின்றார், நம்மை வழிநடத்துகின்றார், அவர் வழியில் நம்மைப் பலப்படுத்துகின்றார், எனவே நாம் தவறான பாதையில் செல்லாமல் ஆண்டவருடைய இல்லத்தை நோக்கிச்செல்ல முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், அவருடைய ஆவியின் ஆற்றல் நம் கண்களைத் திறந்து, நம்மால் புரிந்துகொள்ள முடியாததைப் பார்க்க அனுமதிக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

நாம் யாரும் தனியாக நடப்பதில்லை: நாம் ஒருவரையொருவர் ஊக்கமூட்டுகின்றோம், ஒருவருக்கொருவர் அன்பின் நெருப்பைப் பற்றவைக்கிறோம் என்றும், நம் இதயங்களின் சுடர்கள் ஒன்றிணைந்து நமது பாதையை ஒளிரச் செய்யும் ஒரு பெரிய நெருப்பாக மாறுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இளைஞர்கள் தனிமையான திருப்பயணிகள் அல்ல. ஆண்டவரை நோக்கிய இந்தப் பாதையானது ஒன்றிப்பின் பாதையாகக் காணப்படுகின்றது என்றும் இதுவே திருஅவையில் வாழப்பட்ட நம்பிக்கையின் அழகு என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், அன்றாடம் கடவுளைத் தனிப்பட்ட விதத்தில் நாம் சந்திப்பதன் வழியாக ஆண்டவருடைய இல்லத்தை நோக்கி நாம் ஒன்றிணைந்து பயணிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

மின்னணு உலகில் வாழ்ந்து வரும் நமக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம் ஆயிரம் வாய்ப்புகளை வழங்கினாலும், கடவுள், நண்பர்கள், மற்றும் குடும்பத்தினரின் ஓர் அரவணைப்பு, ஒரு பார்வை, உண்மையான சந்திப்பை ஒருபோதும் அதனால் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ள வலியுறுத்தினார் திருத்தந்தை.

எலிசபெத்தைக் காணச் சென்ற, கடினமான பயணத்தை மேற்கொண்டு தனது சந்திப்பால் மகிழ்ச்சியை அனைவருக்கும் தந்த அன்னை மரியாவை முன்மாதிரிகையாகக் கொண்டு, உண்மையான சந்திப்புக்களைத் தேட ஊக்கமளித்துள்ள திருத்தந்தை அவர்கள், திருத்தூதர் பவுல் கூறுவது போல “மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளின் அன்பால் வளர்க்கப்பட்ட நம்பிக்கையின் மொழி மிகவும் ஆற்றல் மிக்கது என்றும், திருஅவை என்னும் கிறிஸ்துவின் உடலில், சந்தித்தல், அறிந்துகொள்ளுதல், பகிர்தல் போன்றவற்றின் வழியாக அவரது உடலின் உறுப்புக்களாக நாம் மாறியுள்ளோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

ஒன்றிணைந்து நடத்தல், ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல், ஊக்கமளித்தல், போன்றவற்றின் வழியாக நாம் ஆண்டவரின் இல்லத்தை அடைய முடியும் என்றும் இறைத்தந்தையில் இல்லத்தில் நாம் எதிர்பார்க்கப்படுகிறோம், அவருடைய அன்பால் வரவேற்கப்படுகிறோம், நாம் தனியாக நடக்க வேண்டியதில்லை, ஒன்றாக நடக்க வேண்டும் என்பதை அறிவது எவ்வளவு மகிழ்ச்சியானது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இந்த நீண்ட பயணத்தில் இளைஞர்கள் யாராவது இறைஅழைத்தலை உணர்ந்தால் கடவுளின் அழைப்பிற்கு பதிலளிக்க அஞ்சவேண்டாம் என்றும், இவ்வகை அழைத்தல் நம் இதயத்தோடு பேசும் கடவுளிடமிருந்து வருகின்றது, எனவே நம்பிக்கையுடன் கடவுளின் வார்த்தைக்கு செவிசாயுங்கள், ஏனெனில் அவரது வார்த்தை மட்டுமே நம்மை உண்மையிலேயே சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் ஆக்குவது மட்டுமல்லாமல், மனிதர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் நம்மை மாற்றுகின்றது என்றும் மொழிந்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஆகஸ்ட் 2025, 11:54