இழப்பு மற்றும் துன்பத்தில் நமக்கு நெருக்கமாக இருக்கும் கடவுள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருமுழுக்கு அருளடையாளம் வழியாகக் கடவுளை நம்புபவர்களுக்கு, விண்ணகத்தந்தையின் இல்லத்திற்கான ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளது, அங்கு கடவுள் நமக்காகக் காத்திருக்கிறார் என்றும், நம் அன்புக்குரியவர்களின் இழப்பு மற்றும் துன்பத்தின் முகம் வழியாக, கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் மிக நெருக்கமாக இருக்கிறார் என்றும் செய்தி ஒன்றில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரின் துறைமுகத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடி விபத்தின் ஐந்தாவது ஆண்டினை முன்னிட்டு பெய்ரூட்டில் ஆகஸ்ட் 3 ஞாயிறன்று நடைபெற்ற இரவு திருவிழிப்பு செப வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு திருத்தந்தையின் செய்தியானது பெய்ரூட் மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2020 - ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் ஏறக்குறைய 6500 பேர் காயமடைந்தும், 207 பேர் உயிரிழந்தும் இருந்த நிலையில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்காகவும் செபித்து தனது ஆன்மிக உடனிருப்பை வழங்குவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இலாசர் மரணத்தின்போது இயேசு வெளிப்படுத்திய செயல்கள், வார்த்தைகள் போன்றவற்றைத் தியானிக்க வலியுறுத்தியுள்ளார்.
நம் அன்புக்குரியவர்களின் இழப்பு மற்றும் துன்பத்தின் முகம் வழியாகக் கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் மிக நெருக்கமாக இருக்கிறார் என்றும், இயேசு வாழ்க்கையின் ஆதாரமான தந்தைக் கடவுளிடம் செபித்து, நமக்கு ஓர் அடையாளத்தைக் கொடுக்கும் வகையில், கல்லறையிலிருந்து வெளியே வரும்படி இலாசருவுக்குக் கட்டளையிட்டார். அதுபோலவே இலாசரும் உயிர்த்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
கிறிஸ்துவே உயிருள்ள கடவுள், இயேசுவே நமது மீட்பர் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்ற இறைவார்த்தையின் வழியாக இறப்பு மற்றும் துன்பத்தின் இருளில் மூழ்கியிருப்பது போல் நாம் உணரும்போது, கடவுள் நமக்கு நம்பிக்கை ஒளியைக் கொடுக்கிறார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
திருமுழுக்கு அருளடையாளம் வழியாக கடவுளை நம்புபவர்களுக்கு, விண்ணகத்தந்தையின் இல்லத்திற்கான ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளது, அங்கு கடவுள் நமக்காகக் காத்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், நாட்டின் அடையாளமான லெபனானின் கேதார்கள் போல வாழ விண்ணகத்தந்தை நம்மை அழைக்கிறார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
